பொங்கல் தொகுப்பு – நாளை முதல்வர் தொடங்கி வைக்கிறார்!
பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் திட்டத்தை நாளை சென்னை சைதாப்பேட்டையில் உள்ள 169வது வார்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.
சென்னை: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, 2.2 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட உள்ளது. நாளை (9ஆம் தேதி) முதல் அனைத்து ரேஷன் கடைகளிலும் பொங்கல் தொகுப்பு வழங்கவிருக்கிறது. காலை, மதியம் என தனித்தனியாக டோக்கனில் விநியோகிக்கப்பட்ட தேதிகளில் பொங்கல் தொகுப்பு வழங்கப்படவுள்ளது.
அதாவது, நாளை (9ஆம் தேதி) முதல் 12ஆம் தேதி வரை டோக்கனில் குறிப்பிடப்பட்ட எண்களுக்கும், 13ஆம் தேதி விடுபட்ட அனைவருக்கும் வழங்க உள்ளது. இந்நிலையில், ரேஷன் கடைகளில் பொங்கல் தொகுப்பு விநியோகிக்கும் பணிகளை முதல்வர் ஸ்டாலின் நாளை தொடங்கி வைக்கிறார்.
சென்னை சைதாப்பேட்டையில் உள்ள 169-வது வார்டு ரேஷன் கடையில் பொங்கல் தொகுப்பு விநியோகிக்கும் பணிகளை தொடங்கி வைக்கிறார். முன்னதாக, வீடு வீடாக சென்று டோக்கன் கொடுக்கும் பணிகள் நடைபெற்றது. ரேஷன் அதிகாரிகள் அவர்களது எல்லைகளுக்கு உட்பட்ட வீடுகளுக்கு டோக்கன்களை விநியோகம் செய்து வந்தனர்.
இந்நிலையில், நாளை முதல் அனைத்து ரேஷன் கடைகளிலும் பொங்கல் தொகுப்பு விநியோகம் செய்யப்பட உள்ளது. குடும்ப அட்டைதாரர்களுக்கு ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, முழு கரும்பு ஆகியவை பொங்கல் பரிசுத் தொகுப்பில் இடம்பெற்றுள்ளது.