எடப்பாடி தொகுதியில் போட்டி: நாளை வேட்புமனு தாக்கல் செய்கிறார் முதல்வர்!
சேலம் மாவட்டம், எடப்பாடி தொகுதியில் போட்டியிடும் முதலமைச்சர் பழனிசாமி, நாளை தனது வேட்புமனுவை தாக்கல் செய்யவுள்ளார்.
தமிழக சட்டமன்றத் தேர்தல் ஏப்ரல் 6 ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், வேட்பாளர்களை அறிமுகப்படுத்தி, அடுத்தகட்ட பணிகளை அரசியல் கட்சியினர் மேற்கொண்டு வருகின்றனர். அந்தவகையில் முதல்வர் பழனிசாமி, அதிமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளை ஆதரித்து தனது தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கியுள்ளார்.
சேலம் மாவட்டம், எடப்பாடி தொகுதியில் போட்டியிடும் அவர், நாளை தனது வேட்புமனுவை தாக்கல் செய்யவுள்ளதாக தெரிவித்துள்ளார். இதற்காக அவர், இன்று இரவு கோவைக்கு விமானம் மூலம் வந்து, அங்கிருந்து காரில் சேலம் வந்தடைந்து, சேலம் நெடுஞ்சாலை நகரில் உள்ள அவரின் வீட்டில் தங்கி, நாளை காலை 7 மணிக்கு சொந்த ஊரான சிலுவம்பாளையத்துக்கு சென்று, அங்குள்ள பெரியசோரகை சென்றாயபெருமாள் கோவிலில் தரிசனம் மேற்கொண்டு அவர் தனது தேர்தல் பிரச்சாரத்தை தொடங்குகிறார்.
அதனைதொடர்ந்து காலை 11 மணிக்கு முதல்வர், வட்டாட்சியர் அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்கிறார். அதன்பின் எடப்பாடி ஒன்றிய பகுதிகளில் பிரச்சாரம் மேற்கொள்ளவுள்ளார். அதன்பின், மாலையில் நடைபெறும் எடப்பாடி தொகுதியில் நடைபெறும் பிரச்சார கூட்டத்தில் அவர் பேசவுள்ளார்.