மருத்துவர்கள் அறிவுரை.! தேவர் ஜெயந்தி பயணம் ரத்து.! முதல்வருக்கு பதில் யார் யார் செல்கிறார்கள்.?
முதல்வர் மு.க.ஸ்டாலின் பசும்பொன் பயணம் ரத்தானதை அடுத்து திமுக சார்பில், அமைச்சர்கள் துரைமுருகன், கே.என்.நேரு, ஐ.பெரியசாமி என முக்கியமான அமைச்சர்கள் கலந்துகொள்வார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று முதுகுவலி பிரச்சனை காரணமாக மருத்துவ சிகிச்சைக்கு சென்னையில் உள்ள ராமச்சந்திரா மருத்துவமனைக்கு சென்றார். இந்த செய்தி பரபரப்பாக வெளியில் தெரிந்தவுடன், மருத்துவமனை தரப்பில் இருந்து இது வழக்கமான சாதாரண சோதனை தான் என விளக்கம் அளிக்கப்பட்டது .
நாளை ராமநாதபுரத்தில் உள்ள பசும்பொன்னில் நடைபெற உள்ள முத்துராமலிங்க தேவர் ஜெயந்தி விழாவில் முதல்வர் பங்கேற்பார் என அதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வந்தது.
ஆனால், மருத்துவர்கள் அறிவுறுத்தலின் பேரில் இந்த பயணம் தற்போது ரத்து செய்யப்பட்டுள்ளது. அதன் காரணமாக, முதல்வர் ஸ்டாலின் நாளை தேவர் ஜெயந்தி விழாவில் பங்கேற்கவில்லை.
இதனால், திமுக சார்பில், அமைச்சர்கள் துரைமுருகன், கே.என்.நேரு, ஐ.பெரியசாமி என முக்கியமான அமைச்சர்கள் கலந்துகொள்வார் என அறிவிக்கப்பட்டுள்ளது. முதல்வர் ஸ்டாலின் தனது வழக்கமான பணிகளை மேற்கொள்வார் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.