4 மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் ஸ்டாலின் ஆலோசனை!

நாகை, திருவாரூர் மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க, நலத்திட்ட உதவிகளை வழங்குவதற்கு 4 நாள் பயணமாக முதலமைச்சர் முக ஸ்டாலின் கடந்த இரு தினங்களுக்கு முன்பு புறப்பட்டிருந்தார். அதன்படி, நேற்று திருக்குவளையில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி பயின்ற பள்ளியில் காலை சிற்றுண்டி விரிவாக்க திட்டத்தை முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைத்து பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றார்.
இந்த நிலையில், இன்று 4 மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் முக ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். அதன்படி, நாகை, திருவாரூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர் ஆகிய மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் முக ஸ்டாலின் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.
இந்த ஆலோசனையானது நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்று வருகிறது. அமைச்சர்கள் ஐ.பெரியசாமி, கேஎன் நேரு, ரகுபதி, மெய்யநாதன் மற்றும் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் முதலமைச்சருடனான ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர். மேலும், உள்துறை செயலர் அமுதா, டிஜிபி சங்கர் ஜிவால் மற்றும் ஏடிஜிபி அருண் உள்ளிட்டோரும் பங்கேற்றுள்ளனர்