மகிழ்ச்சியான செய்தி…நாளை முதல் ரேசன் கடைகளில் – தொடங்கி வைக்கும் முதல்வர் ஸ்டாலின்!

Default Image

சென்னை:21 பொருட்கள் அடங்கிய பொங்கல் சிறப்பு தொகுப்பு வழங்கும் திட்டத்தை ஜனவரி 4 ஆம் தேதி(நாளை) முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைக்கவுள்ளார்.

2022-ம் ஆண்டு தமிழர் திருநாளான தை பொங்கலை சிறப்பாக கொண்டாடும் வகையில் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் மற்றும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பங்களுக்கும் 21 பொருட்கள் அடங்கிய பொங்கல் சிறப்பு தொகுப்பு வழங்கப்படும் என தமிழக அரசு முன்னதாக அறிவித்திருந்தது.அதன்படி,பொங்கல் தொகுப்பை 2 கோடியே 15 லட்சம் ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ.1,088 கோடி செலவில் வழங்க அரசு உத்தரவிட்டது.

இதனையடுத்து,பொங்கல் சிறப்பு தொகுப்புடன் ரொக்கத்தொகை ஆகியவை நியாயவிலை கடைகளில் அரிசி குடும்ப அட்டைதாரருக்கு வழங்குவதை கண்காணிக்க வேண்டும் என மண்டல பதிவாளர்களுக்கு கூட்டுறவு சங்களின் பதிவாளர் சண்முக சுந்தரம் சுற்றறிக்கை அனுப்பியிருந்தார்.ஆனால்,அதன்பின்னர்  மண்டல பதிவாளர்களுக்கு கூட்டுறவு சங்கம் அனுப்பிய சுற்றறிக்கையில் இடம்பெற்றியிருந்த ரொக்கத் தொகை என்ற வார்த்தையை நீக்கம் செய்து புதிய சுற்றறிக்கை வெளியிடப்பட்டது.

அதே சமயம்,பொங்கல் சிறப்பு பரிசு தொகுப்பு வழங்குவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளையும் தமிழக அரசு வெளியிட்டது.அதன்படி, தெருவாரியாக சுழற்சி முறையில் நாளொன்றுக்கு 150 முதல் 200 குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு விற்பனை முனைய இயந்திரத்தின் (POS) மூலம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில்,21 பொருட்கள் அடங்கிய பொங்கல் சிறப்பு தொகுப்பு வழங்கும் திட்டத்தை நாளை (ஜனவரி 4 ஆம் தேதி) முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைக்கவுள்ளார்.அதன்படி,சென்னை தலைமைச்செயலகத்தில் இருந்து நாளை காலை 10.30 மணிக்கு இத்திட்டத்தை முதல்வர் தொடங்கி வைக்கிறார்.இதன்மூலம்,அனைத்து ரேசன் கடைகளிலும் நாளை முதல் பொங்கல் தொகுப்பு விநியோகம் செய்யப்படவுள்ளது.

அதன்படி,குடும்ப அட்டை ஒன்றுக்கு வழங்கப்படும் பொருட்கள்:பச்சரிசி – ஒரு கிலோ,வெல்லம் – ஒரு கிலோ,முந்திரி – 50 கிராம்,திராட்சை – 50 கிராம், ஏலக்காய் – 10 கிராம்,பாசிப்பருப்பு – 500 கிராம்,நெய் – 100 கிராம், மஞ்சள்தூள் – 100 கிராம்,மிளகாய் தூள் – 100 கிராம்,மல்லித்தூள் – 100 கிராம் ,கடுகு – 100 கிராம்,சீரகம் – 100 கிராம்,மிளகு – 50 கிராம்,புளி – 200 கிராம், கடலைபருப்பு – 250 கிராம்,உளுத்தம் பருப்பு – 500 கிராம் ,ரவை – 1 கிலோ, கோதுமை மாவு – 1 கிலோ,உப்பு – 500 கிராம்,துணிப்பை – 1 மற்றும் கரும்பு ஆகியவை வழங்கப்படவுள்ளன.இது ஏழை மக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதற்கிடையில்,பொங்கல் பரிசு தொகுப்பு அனைத்து ரேசன் கடைகளிலும் வினியோகம் செய்யப்படும் பணிகளை கண்காணிக்க 12 கூடுதல் பதிவாளர்களை நியமனம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டது.மேலும், பொங்கல் பரிசு தொகுப்பின் தரம் குறித்தும் ஆய்வு செய்ய வேண்டும் என்றும் தகுதி வாய்ந்த அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசு சென்றடைவதை உறுதி செய்ய வேண்டும் எனவும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்