ஆளுநர் விவகாரம்: ‘வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பு’ – முதல்வர் ஸ்டாலின் வரவேற்பு.!
ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிரான உச்சநீதிமன்றத்தின் வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பு குறித்து சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

சென்னை : தமிழக அரசு தொடர்ந்த வழக்கில், “10 மசோதாக்களை தமிழக ஆளுநர் நிறுத்தி வைத்தது சட்டவிரோதம்” என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. தமிழ்நாடு அரசின் மசோதாக்களை ஆளுநர் நிறுத்தி வைத்திருந்தது சட்டவிரோதமானது என்றும், அந்த சட்ட முன்வடிவுகளுக்கும் ஆளுநர் அவர்கள் ஒப்புதல் அளிக்கப்பட்டதாக கருதப்பட வேண்டும் எனவும் தெரிவித்து வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பினை உச்சநீதிமன்றம் வழங்கியுள்ளது.
அதன்படி, 10 மசோதாக்களை குடியரசுத் தலைவருக்கு ஆளுநர் அனுப்பியது செல்லாது என்றும் பேரவையில் மீண்டும் நிறைவேற்றி மசோதாவை அனுப்பிய நாளிலேயே ஆளுநர் ஒப்புதல் வழங்க வேண்டும் எனவும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
இந்த நிலையில், தமிழக சட்டப்பேரவை நடைபெற்று கொண்டிருக்கும் நிலையில், ஆளுநர் விவகாரத்தில் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பிக்கு வரவேற்பு தெரிவித்து உரையாற்றிய முதல்வர் ஸ்டாலின், “உச்சநீதிமன்றம் வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பை வழ ங்கியுள்ளது. தமிழ்நாடு மட்டும் இன்றி அனைத்து மாநில அரசுகளுக்கும் கிடைத்த வெற்றி. ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிரான உச்சநீதிமன்றத்தின் வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பு, தமிழ்நாட்டுக்கு மட்டுமல்ல ஒட்டுமொத்த இந்தியாவுக்கும் கிடைத்த மாபெரும் வெற்றி. ‘தமிழ்நாடு போராடும்.. தமிழ்நாடு வெல்லும்’.. “என்று கூறினார்.
இதனிடையே, தமிழ்நாடு கவர்னர் ஆர்.என்.ரவி விரைவில் மாற்றம் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களை கிடப்பில் போட்டது உள்பட பல விவகாரங்களில் திமுக அரசுக்கு ஆர்.என்.ரவி பெரும் தலைவலியாக இருந்தார். ஆனால், அரசு தொடர்ந்த வழக்கில், கவர்னருக்கு எதிராக தீர்ப்பளித்து உச்சநீதிமன்றம் அனைத்திற்கும் முற்றுப்புள்ளி வைத்துள்ளது. இந்நிலையில், அவர் மாற்றப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
லேட்டஸ்ட் செய்திகள்
வசூலில் சக்கை போடு… ரூ.100 கோடி கிளப்பில் இணைந்த GBU.!
April 15, 2025
சோனியா காந்தி, ராகுல் காந்தி மீது குற்றப்பத்திரிகை தாக்கல்.!
April 15, 2025