“அர்ச்சகர்களுக்கு ரூ.1,000 ஊக்கத்தொகை திட்டம்;அமைச்சர் சேகர் பாபு அல்ல ‘செயல் பாபு’ -முதல்வர் ஸ்டாலின்..!
அர்ச்சகர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கும் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்துள்ளார்.
அர்ச்சகர்கள், பட்டாச்சியார்கள், பூசாரிகளுக்கு அரசின் சார்பில் மாதந்தோறும் ரூ.1,000 ஊக்கத்தொகை வழங்கும் திட்டத்தை சென்னை திருவான்மியூரில் முதல்வர் ஸ்டாலின் தற்போது தொடங்கி வைத்துள்ளார்.
அதன்பின்னர்,முதல்வர் பேசியதாவது:
“மகாகவி பாரதியாரின் நினைவு நாளை முன்னிட்டு மரியாதை செய்ய அவரது சிலைக்கு வணக்கம் செலுத்த நான் சென்றாக வேண்டும்.எனவே,எனது உரையை சுருக்கமாக கூறுகிறேன்.
நமது அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு அவர்கள்,இந்த பொறுப்பை ஏற்றுக்கொண்டு எப்படி பணியாற்றுகிறார் என்று உங்கள் அனைவருக்கும் தெரியும்.எனவே,அவரை சேகர் பாபு என்று அழைப்பதை விட ‘செயல் பாபு’ என்றே அழைக்கலாம்.
அந்த பெயருக்கு முழு தகுதிப் படைத்தவராக அவர் விளங்கி கொண்டிருக்கிறார்.சட்டமன்றத்தில் இந்த திட்டத்தை அறிவித்து ஒரு வார காலமே ஆகிறது.எனினும்,சட்டமன்ற கூட்டதொடர் முடிவு பெரும் முன்னேரே ஒரு திட்டம் செயல்படுகிறது என்றால் அது இந்த திட்டம்தான். ‘எள் என்றால் எண்ணையாக இருப்பார்கள்’ என்று கூறுவது வழக்கம் .ஆனால்,சேகர்பாபு எள் என்று சொல்வதற்கு முன்கூட்டியே எண்ணையாக நிற்க கூடியவர் அவர்.
இந்து சமய அறநிலையத்துறை ஒரு கொடுத்து வைத்த துறையாக அமைச்சர் சேகர்பாபு அவர்களால் மாற்றப்பட்டுள்ளது. 24 மணி நேரமும் அவர் உழைத்துக் கொண்டிருக்கிறார்.அவரால் கோயில் நிலங்கள்,சொத்துக்கள் மீட்கப்பட்டுள்ளது.தமிழில் வழிபாடு நடைபெறுகிறது.
குறிப்பாக,சட்டமன்றத்தில் இதுவரை யாரும் செய்யாத,கேள்வி படாத 120 அறிவிப்புகளை அமைச்சர் சேகர்பாபு அவர்கள் வெளியிட்டார்.அது ஒரு பெரிய சாதனை.
மேலும்,முக்கியமாக திருக்கோவில் கல்லூரிகள் தொடங்கப்பட உள்ளது.கோவில் பணியாளர்கள்,அர்ச்சகர்களுக்கு புதிய குடியிருப்புகள் கட்டி தரப்பட உள்ளது.இந்த பணிகள் முடிக்கப்பட்டால் அறநிலையத்துறையின் பொற்காலம் இன்னும் சில மாதங்களில் உருவாகப் போகும் காட்சியை நாம் காணப் போகிறோம்.
அந்த வகையில்,ஒரு கால பூஜை திட்டத்தின் கீழ் 12,950 கோயில்களை சார்ந்த அர்ச்சகர்கள்,பட்டாச்சாரியர்கள்,பூசாரிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000 வழங்கும் திட்டத்தை நான் தொடங்கி வைக்கிறேன்.இதனால்,அரசுக்கு ஆண்டுதோறும் ரூ.13 கோடி செலவாகும்.மன்னிக்கவும் இதனை செலவு என்று சொல்வதற்கு பதில் ஏராளமான அர்ச்சகர்கள் உள்ளிட்டோர் வாழ்வு பெறுகிறார்கள் என்றே கூற வேண்டும்”,என்று தெரிவித்துள்ளார்.