3 மாவட்டங்களில் கட்டப்பட்டுள்ள புதிய பேருந்து நிலையங்கள்-இன்று திறந்து வைக்கும் முதல்வர் ஸ்டாலின்!
சென்னை:தமிழகத்தில் மதுரை உள்ளிட்ட 3 மாவட்டங்களில் கட்டப்பட்டுள்ள புதிய பேருந்து நிலையங்களை முதல்வர் ஸ்டாலின் இன்று காணொலி வாயலாக திறந்து வைக்கிறார்.
ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் மதுரை,நெல்லை மற்றும் தஞ்சை ஆகிய மாவட்டங்களில் கட்டப்பட்டுள்ள புதிய பேருந்து நிலையங்களை முதல்வர் ஸ்டாலின் இன்று திறந்து வைக்கிறார்.சென்னை,தலைமை செயலகத்தில் இருந்து காணொளி வாயிலாக முதல்வர் திறந்து வைக்கிறார்.
அதன்படி,174 கோடி ரூபாய் மதிப்பில் மதுரை பெரியார் பேருந்து நிலையம் இரண்டடுக்கு பார்க்கிங் மற்றும் நவீன வசதிகளுடன் கட்டப்பட்டுள்ளது. இதன் சுவர்கள் முழுவதும் மதுரையின் நினைவுகளையும், பெருமைகளையும் போற்றும் வகையில் ஓவியங்கள் இடம் பெற்றுள்ளன.
அதைப் போல,நெல்லையில் 110 கோடி ரூபாய் மதிப்பில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ள புதிய பேருந்து நிலையம்,பாளையங்கோட்டை பேருந்து நிலையம் ஆகியவை இன்று மக்கள் பயன்பாட்டுக்கு வருகின்றன.மேலும்,நெல்லை பேருந்து நிலையத்தில் அறிவியல் தொடர்பான கருவிகள், படங்கள், ராக்கெட் வடிவமைப்பு உள்ளிட்ட சிறப்பு அம்சங்களுடன் அறிவியல் பூங்கா அமைக்கப்பட்டுள்ளது.
அதுமட்டுமல்லாமல்,30 கோடி ரூபாய் செலவில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் கட்டி முடிக்கப்பட்டுள்ள தஞ்சை பேருந்து நிலையத்தையும் முதல்வர் இன்று காணொலி வாயிலாக திறந்து வைக்கிறார்.