பிரதமரை சந்திக்க நேரம் கோரிய முதலமைச்சர் ஸ்டாலின்!
டெல்லியில் நாளை பிரதமர் மோடியை சந்திக்க நேரம் கோரி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணிகூட்டத்தில் கலந்து கொள்வதற்காக இன்று இரவு டெல்லி செல்லும் தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் நாளை டெல்லியில் தங்கி இருந்து கூட்டத்தில் கலந்து கொள்ளவுள்ளார்.
இதன் பிறகு நாளை மாலை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தமிழ்நாட்டிற்கு திரும்புவார் என தெரிவிக்கப்பட்டது. ஆனால், தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களில் கனமழை, வெள்ள பாதிப்பு நீடித்து வரும் நிலையில், முதல்வரின் டெல்லி பயணத்தில் மாற்றம் செய்யப்படும் என தகவல் வெளியாகியிருந்தது.
ரெட் அலர்ட் தொடரும்! அதி கனமழை தான், மேகவெடிப்பு அல்ல… வானிலை ஆய்வு மையம்!
ஆனால், முதல்வர் மு க ஸ்டாலினின் பயணத் திட்டத்தில் இதுவரை எந்த மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை. இந்த நிலையில், டெல்லியில் நாளை பிரதமர் மோடியை சந்திக்க நேரம் கோரி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். அதில், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் அண்மையில் பெய்த மிக்ஜாம் புயல் மற்றும் கனமழையால் ஏற்பட்ட பாதிப்புகளுக்கு விரைந்து நிதி ஒதுக்க கோரவும்,
தற்போது தென் மாவட்டங்களில் பெய்து வரும் அதி கனமழையால் ஏற்பட்ட பாதிப்புகள் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் குறித்து எடுத்துக் கூறி ஆலோசிக்கவும், நாளை டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி அவர்களை சந்திக்க முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் நேரம் கோரி கடிதம் எழுதியுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.