நாமக்கலில் வளர்ச்சி திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டிய முதலமைச்சர் ஸ்டாலின்..!
நாமக்கலில் ரூ. 810.28 கோடி மதிப்பிலான புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி, முடிவுற்ற திட்டப்பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
நாமக்கல் : மாவட்டத்தில் பல்வேறு புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டித் தொடங்கி வைப்பதற்காகச் சென்னையிலிருந்து இன்று காலை விமானம் மூலம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சேலம் மாவட்டத்துக்கு வருகை தந்திருந்தார். அதன்பிறகு காரின் மூலம் நாமக்கல் சென்ற அவர் மதியம் 12.30 மணியளவில் பரமத்தி சாலையில் உள்ள செலம்பக்கவுண்டா் பூங்காவில் திமுக முன்னாள் தலைவர் மு.கருணாநிதியின் உருவச் சிலையைத் திறந்து வைத்தார்.
அதனைத்தொடர்ந்து, 5 மணி அளவில் நாமக்கல்லில் ரூ. 810.28 கோடி மதிப்பிலான புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி, முடிவுற்ற திட்டப்பணிகளைத் தொடங்கி வைத்தார். இதற்கான விழாவிலும் நாமக்கல்லில் பெரிய அளவில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில், அமைச்சா் கே.என்.நேரு, பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் எ.வ.வேலு, ஆதி திராவிடா் நலத் துறை அமைச்சா் மா.மதிவேந்தன் ஆகியோரும் இந்த விழாவில் கலந்து கொண்டார்கள்.
விழாவில் அடிக்கல் நாட்டிய பிறகு உரையாற்றிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ” தமிழகத்தின் வளர்ச்சிக்கு அடித்தளமாக இருப்பது நாமக்கல் மாவட்டம் தான் என்பதை இந்த நேரத்தில் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். லாரி கட்டமைப்பை உருவாக்கி சரக்கு போக்குவரத்துக்கு அடித்தளமிட்ட நாமக்கல் மாவட்டம் தமிழ்நாடு வளர்ச்சிக்கு வித்திட்டுள்ளது.
எனவே, இப்படியான நாமக்கல்லில் கலைஞர் கருணாநிதியின் சிலை அமைவது மிகவும் பொருத்தமானது. புதுமைப்பெண் திட்டத்தில் நாமக்கல் மாவட்ட பெண்கள் முதலிடம் பெற்றுள்ளது மகிழ்ச்சியாக இருக்கிறது. வளர்ச்சி திட்டப் பணிகள் பற்றி நவம்பர் முதல் மாவட்டங்களில் கள ஆய்வு நடைபெறும். அருந்ததியர் உள் ஒதுக்கீட்டு சட்டத்தைக் கொண்டு வந்தவன் என்ற முறையில் பெருமை அடைகிறேன்” எனவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.