#Breaking:”இனி வரலாறு தமிழகத்தில் இருந்து எழுதப்படும்…7 இடங்களில் தொல்லியல் அகழாய்வுகள்” – முதல்வர் அறிவிப்பு!

Default Image

சென்னை:நடப்பு ஆண்டில் தமிழகத்தில் 7 இடங்களில் தொல்லியல் அகழாய்வுகள் நடைபெறவுள்ளன என்று முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு.

தமிழகத்தில் நடப்பு ஆண்டில் ஏழு இடங்களில் தொல்லியல் அகழாய்வுகள் மற்றும் சங்ககாலக் கொற்கைத் துறைமுகத்தினை அடையாளம் காண முன்களப் புல ஆய்வு நடைபெறும் என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார்.இது தொடர்பாக,முதல்வர் கூறியதாவது:

“தமிழ் நிலமானது மிகத்தொன்மை வாய்ந்தது.தமிழின் தொன்மையையும், தமிழரின் பண்பாட்டையும் அறிவியல்பூர்வமாக நிறுவ வேண்டுமானால் முறையான அகழாய்வுகள் அவசியமாகும்.அண்மைக்காலமாக,கீழடி, அழகன்குளம்,கொற்கை,சிவகளை,ஆதிச்சநல்லூர், கொடுமணல், மயிலாடும்பாறை, கங்கைகொண்ட சோழபுரம் ஆகிய 7 இடங்களில் மேற்கொள்ளப்பட்ட அகழாய்வுகள் தமிழகத்தின் தொன்மையைப் புதிய காலக்கணிப்பு மூலம் பல நூற்றாண்டுக் காலத்திற்கு முன்னோக்கி எடுத்துச் சென்றுள்ளது என்றால் அது மிகையாகாது.

கீழடி அகழாய்வு மற்ற அகழாய்வுகளுக்கு முன்னோடி அகழாய்வாகத் திகழ்கிறது. இதுவரை கங்கைச் சமவெளியில் கி.மு. ஆறாம் நூற்றாண்டிலிருந்த “நகரமயமாக்கம்” தமிழ்நாட்டில் இல்லையென்றும்,பிராமி எழுத்து மௌரியர் தோற்றுவித்தது என்றும் கருதுகோள்கள் இருந்தன.அத்தகைய கருதுகோள்களுக்கு விடையளித்துள்ளது கீழடி அகழாய்வு.நகரமயமாக்கம் அறிவியல்பூர்வமாக தமிழ்நாட்டில் கி.மு. ஆறாம் நூற்றாண்டிலேயே ஏற்பட்டிருந்தது என்பது மட்டுமல்லாமல், படிப்பறிவும் எழுத்தறிவும் பெற்ற மேம்பட்ட சமூகமாக விளங்கிய கீழடி அகழாய்வு நிலைநிறுத்தியுள்ளது கண்டறியப்பட்டுள்ளது.

“தண் பொருநை” என்று அழைக்கப்பட்ட தாமிரபரணி ஆற்றங்கரை நாகரிகம் மூவாயிரத்து இருநூறு ஆண்டுகளுக்கு முற்பட்டது என்பதை அறிவியல்பூர்வ ஆய்வுகளின் அடிப்படையில் உறுதி செய்ய முடிகிறது என்பதை கடந்த 8-9-2021 அன்று சட்டப்பேரவையில் நான் அறிவித்தேன்.

இதைத் தொடர்ந்து, தமிழ்நாட்டின் அனைத்துப் பகுதிகளையும் உள்ளடக்கி வரலாற்றுக்கு முந்தைய காலம் முதல் வரலாற்றுக்காலம் வரையிலான தொல்லியல் இடங்களில் அகழாய்வு செய்வதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது. பண்டைத் தமிழ்ச் சமூகத்தின் தொன்மை, பண்பாடு மற்றும் விழுமியங்களுக்குப் பெருமை சேர்க்கும் வகையில் தற்போது 2022ஆம் ஆண்டில் கீழ்க்காணும் ஏழு இடங்களில் அகழாய்வுகள் செய்யப்படவுள்ளன.

1. கீழடி மற்றும் அதனைச் சுற்றியுள்ள இடங்கள்( கொந்தகை, அகரம், மணலூர்), சிவகங்கை மாவட்டம் – எட்டாம் கட்டம்

2. சிவகளை, தூத்துக்குடி மாவட்டம் – மூன்றாம் கட்டம்

3. கங்கைகொண்டசோழபுரம், அரியலூர் மாவட்டம்- இரண்டாம் கட்டம்

4.மயிலாடும்பாறை, கிருஷ்ணகிரி மாவட்டம்- இரண்டாம் கட்டம்

5. வெம்பக்கோட்டை, விருதுநகர் மாவட்டம் – முதல் கட்டம்

6. துலுக்கர்பட்டி, திருநெல்வேலி மாவட்டம்- முதல் கட்டம்

7. பெரும்பாலை, தர்மபுரி மாவட்டம்- முதல் கட்டம்.

மேலும், “திரைகடலோடியும் திரவியம் தேடல்” என்ற முதுமொழிக்கேற்ப, பண்டையத் தமிழ்ச் சமூகம் நாட்டின் பிறபகுதிகளோடும். வெளிநாடுகளுடனும் வணிகத் தொடர்பு கொண்டிருந்த சங்ககாலத் துறைமுகங்களான பூம்புகார், கொற்கை, அழகன்குளம், வசவசமுத்திரம் ஆகியவை முக்கியப் பங்காற்றின.
தமிழ்நாடு அரசுத் தொல்லியல் துறை, தன்பொருநை (தாமிரபரணி) ஆற்றின் முகத்துவாரத்திற்கு எதிரில் கடற்கரையோர முன்கள புலஆய்வு மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளது. முதற் கட்டமாக, சங்ககாலக் கொற்கைத் துறைமுகத்தின் தொல்லியல் வளத்தினைக் கண்டறிய கடலோரங்களில் ஆய்வினை மேற்கொள்ள இந்தியக் கடலாய்வு பல்கலைக்கழகம் மற்றும் தேசிய கடல்சார் தொழில்நுட்ப நிறுவனம் ஆகியவற்றுடன் இணைந்து கடல் ஆய்வு மேற்கொள்ளத் திட்டமிடப்பட்டுள்ளது.

அகழாய்வுப் பணிகள் வரும் பிப்ரவரி மாதம் முதல் வாரத்தில் தொடங்கி செப்டம்பர் மாதம் இறுதி வரை நடைபெறவுள்ளது.மேலும் இதற்காக வரவு-செலவு திட்டத்தில் ஒதுக்கப்பட்டுள்ள 5 கோடி ரூபாய் நிதியில் அகழாய்வுகள்,களஆய்வுகள் மற்றும் சங்க காலக் கொற்கைத் துறைமுகத்தினை அடையாளம் காண முன்களப் புல ஆய்வுப் பணிகளும் மேற்கொள்ளப்படவுள்ளன.

இந்தியத் துணைக்கண்டத்தின் வரலாறு,இனி தமிழ் நிலப்பரப்பிலிருந்துதான் தொடங்கி எழுதப்பட வேண்டும் என்பதைச் சான்றுகளின் மேற்காணும் அடிப்படையில் அகழாய்வுகளும், முடிவுகளும் உறுதி செய்யும்”,என்று தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்