மிக்ஜாம் புயல்… பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண நிதியை அறிவித்தார் முதலமைச்சர் ஸ்டாலின்!
மிக்ஜாம் புயல் வெள்ளத்தால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவியாக ரூ.6000 வழங்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதுதொடர்பான அறிக்கையில், தமிழ்நாட்டில் டிச.3 மற்றும் 4ம் தேதிகளில் வீசிய “மிக்ஜாம்” புயல் காரணமாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் வரலாறு காணாத மழைப்பொழிவு ஏற்பட்டு, கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டன.
“மிக்ஜாம்” புயலின் தாக்கம் குறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கைகளின் அடிப்படையில், தமிழ்நாடு அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்திருந்தது. மீட்புப் பணிகளை மேற்கொள்வதற்கு முன்னதாகவே திட்டமிடப்பட்டு, தேசிய, மாநில பேரிடர் மீட்புப் படைகள் மற்றும் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையினர் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தனர்.
புயல் மழையின் தாக்கத்திற்குப் பிறகு உடனடியாக களத்தில் மீட்புப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டன. இதன்மூலம், 26 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் பாதுகாப்பான பகுதிகளுக்கு அழைத்துச் செல்லப்பட்டார்கள். சென்னை மாவட்டத்தில் மட்டும் 8ம் தேதி வரை, மொத்தம் 47 இலட்சம் உணவுப் பொட்டலங்கள் வழங்கப்பட்டுள்ளன.
முதல்வர் மெத்தனம்.. மக்கள் பாதிப்பு – இபிஎஸ் கடும் குற்றசாட்டு!
மொத்தமாக 4 மாவட்டங்களில் 51 இலட்சத்திற்கும் மேற்பட்ட உணவுப் பொட்டலங்கள் இதுவரை வழங்கப்பட்டுள்ளன. மேலும், பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தேவையான உணவு, குடிநீர், பால் ஆகிய பொருட்கள் அந்தந்த மாவட்ட ஆட்சித் தலைவர்கள் மூலம் பெறப்பட்டு, முறையாக வழங்கப்பட்டு வருகின்றன.
வெள்ளம் பாதித்த பகுதிகளில் மழைநீர் தற்போது வடிந்துள்ள நிலையில், அந்தப் பகுதிகளில் தற்போது 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளர்களை ஈடுபடுத்தி, பேரிடர் மீட்புக் குழுவினரின் உதவியுடன் போர்க்கால அடிப்படையில் தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
மேலும், மருத்துவ முகாம்களும் தேவையான இடங்களில் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண நிதியாக ரூ.6000 வழங்கப்படும் என்றும் இந்த தொகை அந்ததந்த பகுதிகளில் உள்ள நியாயவிலை கடைகளின் மூலம் ரொக்கமாக வழங்கப்படும் எனவும் முதல்வர் அறிவித்துள்ளார்.
நிவாரண நிதி அறிவிப்புகள்:
- மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண நிதியாக ரூ.6000 வழங்கப்படும்.
- புயல், வெள்ளத்தினால் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு, இழப்பீட்டுத் தொகையை ரூ.4 லட்சத்திலிருந்து, ரூ.5 லட்சமாக உயர்த்தி வழங்கப்படும்.
- சேதமடைந்த குடிசைகளுக்காக ஏற்கெனவே வழங்கப்படும் தொகை ரூ.5,000-ஐ, ரூ.8,000 ஆக உயர்த்தி வழங்கப்படும். மழையினால் பாதிக்கப்பட்ட (33 விழுக்காடு மற்றும் அதற்கு மேலாக) நெற்பயிர் உள்ளிட்ட இறவைப் பாசனப் பயிர்களுக்கு ஹெக்டேர் ஒன்றுக்கு ரூ.13,500 லிருந்து, ரூ.17,000 ஆக உயர்த்தி வழங்கப்படும்.
- பல்லாண்டு பயிர்கள் மற்றும் மரங்கள் (Perennial crops and trees) சேதமுற்றிருப்பின் (33 விழுக்காடு மற்றும் அதற்கு மேலாக) இழப்பீடாக ஹெக்டேர் ஒன்றுக்கு ரூ.18,000-லிருந்து, ரூ.22,500 ஆக உயர்த்தி வழங்கப்படும்.
- மழையினால் பாதிக்கப்பட்ட (33 விழுக்காடு மற்றும் அதற்கு மேலாக) மானாவாரிப் பயிர்களுக்கு ஹெக்டேர் ஒன்றுக்கு ரூ.7.410 லிருந்து, ரூ.8,500 ஆக உயர்த்தி வழங்கப்படும்.
- எருது. பசு உள்ளிட்ட கால்நடைகளின் உயிரிழப்பு நிவாரணமாக ரூ.30,000 லிருந்து ரூ.37,500 ஆக உயர்த்தி வழங்கப்படும்.
- வெள்ளாடு, செம்மறி ஆடு உயிரிழப்பு நிவாரணமாக ரூ.3,000 லிருந்து ரூ.4,000 உயர்த்தி வழங்கப்படும் எனவும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
“மிக்ஜாம்” புயல் வெள்ளத்தால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவியாக ரூபாய் 6 ஆயிரம் ரொக்கமாக வழங்கப்படும்!
இதர நிவாரண உதவித் தொகைகளும் உயர்த்தி வழங்கப்படும்!
மாண்புமிகு முதலமைச்சர் திரு.@mkstalin அவர்கள் அறிவிப்பு#CMMKSTALIN | #TNDIPR | #CycloneMichaung
(1/2) pic.twitter.com/UHrMG4ogTu— TN DIPR (@TNDIPRNEWS) December 9, 2023