முத்திரை பதிக்கும் முத்தான திட்டங்கள்… ஆலோசனைக் கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் உரை.!
முத்திரை பதிக்கும் முத்தான திட்டங்கள் குறித்த ஆலோசனைக் கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் உரையாற்றினார்.
தமிழக அரசு சார்பில் அறிமுகப்படுத்தப்படும் திட்டங்கள் தற்போது எந்த நிலையில் இருக்கின்றன என்பதை, பல்வேறு துறை அமைச்சர்களுடன் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னை தலைமை செயலகத்தில் இன்று ஆலோசனை நடத்தினார். அப்போது பேசிய முதல்வர் ஸ்டாலின், அரசுப்பணிகள் எந்த அளவுக்கு வேகமாக செயல்படுத்தப்பட்டு வருகின்றன என்பதை சுட்டிக்காட்டினார்.
அரசுப்பணிகள் சுனாமி வேகத்தில் நடைபெறுவதற்கு, கலைஞர் நூற்றாண்டு மருத்துவமனை கட்டப்பட்டு திறக்கப்பட்டுள்ளது தான் சான்று, மேலும் கலைஞர் நூற்றாண்டு நூலகம் விரைவில் திறக்கப்படும் எனவும் அவர் கூறினார். கள ஆய்வு திட்டங்கள் மூலம் ஒவ்வொரு மாவட்டத்திலும், அரசின் திட்டங்கள் செயல்படுவதை நேரில் ஆய்வு செய்து மாவட்ட அலுவலர்களுடன் இது குறித்து ஆலோசனையும் நடத்தப்படுகிறது.
கடந்த 2 ஆண்டுகளில் நமது அரசின் திட்டங்கள் செயல்படுவதை மக்களே நேரடியாக பார்க்கின்றனர். வளர்ச்சிக்கு தேவையான திட்டம் நிறைவேற்றப்பட்டு வருவதை எண்ணி பெருமைப்படுவதாகவும் முதல்வர் ஸ்டாலின் கூறினார். மேலும் கூறிய முதல்வர், எல்லாருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும் என்ற லட்சியப்பாதையில் செல்லும் நமது அரசுக்கு முழு ஒத்துழைப்பு வழங்கவேண்டும் எனவும் ஸ்டாலின், அந்த கூட்டத்தில் தெரிவித்தார்.