ஊரகப் பகுதிகளில் நாளை முதல் ‘மக்களுடன் முதல்வர்’ திட்டம்!

makkaludan mudhalvar

தருமபுரி : ஊரகப் பகுதிகளில் ‘மக்களுடன் முதல்வர்’ திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை தருமபுரியில் தொடங்கி வைக்கிறார். மக்களுடன் முதல்வர் திட்டம் என்பது தமிழக முதல்வர் மக்கள் குறைகளை நேரடியாகக் கேட்டறிந்து தீர்க்கும் ஒரு திட்டமாகும். இதில், பொதுமக்கள் தங்களின் பிரச்சனைகள், கோரிக்கைகள் மற்றும் குறைகளை முதல்வரிடம் நேரடியாக முன்வைக்கலாம்.

இதற்காக, மாவட்ட அளவில் சிறப்பு மையங்கள் அமைக்கப்பட்டு, அங்கு மக்களின் குறைகளைப் பதிவு செய்ய அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். அதன்படி, அந்தந்த அரசு அதிகாரிகள் நேரடியாக மக்களிடம் தகவல்களைப் பெறுவார்கள் மற்றும் விரைவாக தீர்வுகளை முன்மொழிவார்கள்.

இந்த திட்டத்தின் மூலம், அரசாங்கம் மக்களின் தேவைகளை விரைவாகக் கவனித்து, தக்க நடவடிக்கைகளை எடுக்க முடியும். அரசின் சேவைகளை விரைவாகவும், எளிதாகவும் மக்களுக்கு கிடைப்பதற்காக இந்த திட்டம் உருவாக்கப்பட்ட நிலையில், முதல்கட்டமாக நகர்ப்புறங்களில் கடந்த டிசம்பர் மாதம் 18-ம் தேதி இத்திட்டம் தொடங்கப்பட்டது.

அதைத் தொடர்ந்து ஊரகப் பகுதிகளில் இந்த திட்டத்தை விரிவுபடுத்தும் வகையில், நாளை தொடங்கி வைக்கப்படுகிறது. ஊரகப் பகுதிகளில் ‘மக்களுடன் முதல்வர்’ திட்டத்தை முதல்வர் ஸ்டாலின், தருமபுரி மாவட்டம், பாளையம் புதூர் ஊராட்சி, அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நாளை (11.07.2024) வியாழக்கிழமை காலை 10.15 மணியளவில் நடைபெறும் அரசு விழாவில் தொடங்கி வைக்கிறார்.

முதற்கட்டமாக, மக்களுடன் முதல்வர் திட்டத்தில்  நகர் பகுதிகளில் 2058 முகாம்கள் நடத்தி 8.74 லட்சம் மனுக்களுக்குத் தீர்வு காணப்பட்டது. இத்திட்டம் தற்போது, தமிழ்நாடு முழுவதும் உள்ள 12,525 கிராம ஊராட்சி மக்கள் பயன்பெறும் வகையில் ஏறத்தாழ 2,500 முகாம்கள் நடத்தி விரிவுபடுத்தப்படுகிறது. மேலும் இந்த திட்டம், அரசுக்கும் மக்களுக்கும் இடையிலான தொடர்பு முறையை மேம்படுத்துவதோடு, மக்களின் நலனைப் பராமரிக்கவும், துரிதமாக நடவடிக்கை எடுக்கவும் உதவுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்