உறுதியான சசிகலா விடுதலை ! அதே நாளில் ஜெயலலிதா நினைவிடம் திறப்பு
சசிகலா விடுதலையாகும் அதே நாளில் தான் ஜெயலலிதா நினைவிடத்தை முதலமைச்சர் பழனிசாமி திறந்து வைக்கிறார்.
சசிகலா விடுதலை :
சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் ஆகிய 3 பேருக்கு பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் 4 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கியது.பின்னர், 2017-ஆம் ஆண்டு பிப்ரவரி முதல் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டனர்.சசிகலா உள்ளிட்ட 3 பேரின் தண்டனை காலம் வரும் பிப்ரவரி மாதம் முடிவடைகிறது.பின்பு அபராதத்தை செலுத்தினால் சசிகலா ஜனவரி 27-ஆம் தேதி விடுதலை செய்யப்படுவார் என்று அண்மையில் சிறை நிர்வாகம் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டது.பின்னர் சசிகலாவின் வழக்கறினரான ராஜா செந்தூர்பாண்டியனுக்கு சிறை நிர்வாகத்திடம் இருந்து முறைப்படி கடிதம் கிடைத்திருக்கிறது.அந்த கடிதத்தில், ஜனவரி 27-ஆம் தேதி புதன்கிழமை காலை சசிகலா விடுதலையாக உள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது .
100 % இணைய வாய்ப்பில்லை :
சசிகலா சிறையில் இருந்து வெளியே வந்தால் அதிமுகவில் மாற்றம் ஏற்படுமா என்ற கேள்வி வெகுவாக எழுந்து வந்தது.இதற்கு பதில் அளிக்கும் வகையில் நேற்று பேசிய முதலமைச்சர் பழனிசாமி ,சசிகலா வெளியில் வந்த பிறகு 100 % இணைய வாய்ப்பில்லை என்று தெரிவித்துள்ளார்.
சசிகலா விடுதலையாகும் அதே நாளில் தான் ஜெயலலிதா நினைவிடம் திறப்பு :
ஆனால் சசிகலா விடுதலையாகும் அதே நாளில் தான் ஜெயலலிதா நினைவிடத்தை தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி திறந்து வைக்கிறார் என்றும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.வருகின்ற 27-ஆம் தேதி அன்று காலை 11 மணியளவில் திறந்து வைக்க உள்ளதாகவும், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் முன்னிலை வகிப்பார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.ஆனால் ஜெயலலிதா நினைவிடத்தை திறக்க முதலமைச்சர் பழனிசாமி அழைப்பு விடுத்ததாகவும்,அதனை பிரதமர் மோடி ஏற்க மறுத்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.இதன் பின்னரே முதலமைச்சர் பழனிசாமி ஜெயலலிதா நினைவிடத்தை திறந்து வைக்க உள்ளார் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது.