இன்று டெல்லி முதல்வர், மத்திய அமைச்சர்களை சந்திக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுடன் சேர்ந்து டெல்லி மெகல்லா கிளினிக் மற்றும் அரசு பள்ளிகளை பார்வையிடும் தமிழக முதல்வர்.
தலைநகர் டெல்லியில் திமுக அலுவலக திறப்பு விழா மற்றும் பிரதமர் மோடியை சந்திக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் 3 நாள் பயணமாக டெல்லி சென்றுள்ளார். நேற்று நாடாளுமன்றம் சென்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மற்றும் போக்குவரத்துத்துறை அமைச்சர் உள்ளிட்ட மத்திய அமைச்சர்களை சந்தித்தார்.
இதன்பின் பிரதமர் மோடியை சந்தித்த முதல்வர், மேகதாது விவகாரம், நீட் விலக்கு, தமிழகத்துக்கு வரவேண்டிய நிதி, இலங்கை விவகாரம், மழை வெள்ளம் மற்றும் மாநில அரசின் திட்டங்களுக்கான நிதி, ஜிஎஸ்டி நிலுவை தொகையை விடுவித்தல் உள்ளிட்ட முக்கிய கோரிக்கைகள் குறித்து பிரதமரிடம் பேசியதாக கூறப்பட்டது.
இந்த நிலையில், இன்று டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்திக்கவுள்ளார். டெல்லி மெகல்லா கிளினிக் மற்றும் அரசு பள்ளிகளை கெஜ்ரிவாலுடன் இணைந்து முதலமைச்சர் பார்வையிடுகிறார். இதனிடையே, மத்திய அமைச்சர்கள் நிர்மலா சீதாராமன் மற்றும் பியூஸ் கோயலை சந்திக்கிறார். அப்போது, நிலுவையில் உள்ள நிதிகளை விடுவிக்க கோரி முதலமைச்சர் வலியுறுத்த வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.