போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை.. இயல்பு நிலைக்கு திரும்பும் சென்னை – முதல்வர் ஸ்டாலின்
மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் வரலாறு காணாத மழை கொட்டி தீர்த்தது. இதனால், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மழைநீர் தெங்கியதால், வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. இதன் காரணமாக மக்களின் இயல்பு வாழ்கை பாதிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், சென்னையின் பல்வேறு பகுதிகள் மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பி வரும் நிலையில், மழைநீர் வடியாத பகுதிகளில் மீட்புப் பணிகள் மற்றும் மழைநீர் அகற்றும் பணிகள் தொடர்ந்து நடந்து வருகிறது. இப்பணியில் மத்திய, மாநில பேரிடர் குழுக்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.
இந்த சூழலில், புயல் பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்ய சென்னை வந்த மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், ஹெலிகாப்டர் மூலம் சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களை பார்வையிட்டார். இதன்பின், சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன், ராஜ்நாத் சிங் ஆலோசனை மேற்கொண்டார்.
அப்போது, மத்திய அமைச்சரிடம் புயல் பாதிப்புகள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எடுத்துரைத்தார். இதன்பின் முதலமைச்சர் கூறியதாவது, போர்க்கால அடிப்படையில் தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. சென்னையில் இயல்பு வாழ்க்கை திரும்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
சென்னை வெள்ள பாதிப்பு.! ஹெலிகாப்டர் மூலம் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆய்வு.!
புயல் நிவாரண நிதியாக ரூ.5,060 கோட்டிருந்தோம், ரூ.450 கோடியை மத்திய அரசு வழங்கியுள்ளது. நிதி வழங்கியதற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். சென்னை நகரமும், மக்களும் இயல்பு நிலைக்கு வர தொடங்கியுள்ளது. அரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் உயிரிழப்பு, சேதம் பெருமளவில் குறைந்துள்ளது.
சென்னை மழை, வெள்ள பாதிப்புகளை பார்வையிட மத்திய குழு வரவுள்ளது. அனைத்து பகுதிகளும் இயல்பு நிலைக்கு கொண்டு வர அரசு தொடர்ந்து நடவடிக்கை எடுக்கும். வெள்ள பாதிப்பு பகுதிகளில் நிவாரண பணிகள் நடைபெற்று வருகிறது. தமிழகத்தின் கோரிக்கை குறித்து மத்திய அமைச்சரிடம் மனுவாக அளித்துள்ளோம் என்றார்.
இதனிடையே, பேசிய மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங், வெள்ள நிவாரணத்திற்கு ரூ.450 கோடி மட்டுமின்றி, சென்னை வெள்ள மேலாண்மை திட்டத்திற்கும் மத்திய அரசு ரூ.561 கோடி நிதி வழங்கியுள்ளது. தமிழ்நாடு மக்களுக்கு தேவையான அனைத்து நிவாரண உதவிகளும் விரைந்து செய்யப்படும். புயல், மழை பாதிப்பில் இருந்து தமிழ்நாடு மீள்வதற்கான அனைத்து உதவிகளையும் மத்திய அரசு செய்யும் என உறுதியளித்தார்.