தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்தின் புதிய தலைவர் நியமனம் – முதல்வர் அறிவிப்பு..!

Default Image

தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்தின் புதிய தலைவர் நியமனம் தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிவிப்பு விடுத்துள்ளார்.

தமிழ்நாடு கேபிள் டிவி நிறுவனத்திற்குப் புதிய தலைவராக குறிஞ்சி திரு.என்.சிவகுமார் அவர்களை நியமித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் உத்தரவிட்டுள்ளார்.

மேலும்,இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில்:

“தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம் 4.10.2007 அன்று அப்போதைய முதலமைச்சர் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களால் துவக்கப்பட்ட நிறுவனம் ஆகும். இந்நிறுவனம், தனது சேவையைத் துவங்குவதற்கு முன்னர், ஒரு சில தனியார் நிறுவனங்கள் கேபிள் தொழிலில் ஆதிக்கம் செலுத்தி வந்தததோடு, கேபிள் டிவி ஆபரேட்டர்கள் மற்றும் பொதுமக்களிடமிருந்து அதிக அளவு கட்டணத்தை வசூலித்து வந்தன.

இந்தக் குறைபாட்டினைக் களையும் பொருட்டுத் தொடங்கப்பட்ட கேபிள் டிவி நிறுவனம்,தமிழ்நாடு அரசு கேபிள் டிவி ஆப்பரேட்டர்களின் வாழ்வாதாரத்தைக் கருத்தில் கொண்டும், குறைந்த கட்டணத்தில் நிறைந்த சேவைகளைப் பொதுமக்களுக்கு வழங்கும் நோக்கத்துடனும் செயல்பட்டு வருகிறது அதோடு மட்டுமல்லாமல், அரசின் பல்வேறு சேவைகளைப் பொது மக்களுக்கு வழங்குவதற்கு ஏதுவாக, அரசு இ- சேவை மையங்களை நிறுவி, அதன்மூலம் இணையச் சேவைகளையும் தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம் சிறப்பான முறையில் வழங்கி வருகிறது.

இந்த சூழ்நிலையில், கடந்த 12.3.2021 முதல் தமிழ்நாடு கேபிள் டிவி நிறுவனத்தின் தலைவர் பதவி காலியாக இருந்ததை அறிந்த, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள், குறிஞ்சி என். சிவகுமார் அவர்களைத் தமிழ்நாடு கேபிள் டிவி நிறுவனத்திற்குத் தலைவராக நியமித்து இன்று (6.7.2021) ஆணையிட்டுள்ளார்கள்.

 ஈரோட்டைச் சேர்ந்த குறிஞ்சி திரு என்.சிவகுமார் அவர்கள் கட்டுமானப் பொறியாளர் ஆவார். இவர் ஏற்கனவே ஈரோடு மாவட்ட கேபிள் டிவி உரிமையாளர்கள் நலச்சங்கத் தலைவராகவும், தமிழ்நாடு கேபிள் டிவி மல்டி சிஸ்டம் ஆபரேட்டர் சங்க மாநில துணைத் தலைவராகவும் உள்ளார். அதோடு மட்டுமல்லாமல், ஈரோடு மாவட்டத்தின் அரிமா சங்கத் தலைவராகவும் பொறுப்பு வகித்து, பல்வேறு சமூகப் பணிகளையும் ஆற்றி வருகிறார்”,என்று தெரிவித்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்