நாளை அனைத்துக் கட்சி கூட்டம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!

Default Image

சென்னை:நாளை அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெறும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்,பேரவை 110விதியின் கீழ் அறிவிப்பு.

சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்று வரும் தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் இரண்டாம் நாளான நேற்று,மறைந்த முன்னாள் ஆளுநர் ரோசய்யா, முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் உள்ளிட்ட 11 இராணுவ வீரர்கள்,இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் துரைமாணிக்கம், புனீத் ராஜ்குமார் ஆகியோர்களின் மறைவிற்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதனைத்தொடர்ந்து கேள்வி – பதில் நேரம் நடைபெற்றது.இதன்பின் பேரவை விதி எண் 110ன் கீழ் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள்: “எல்லார்க்கும் எல்லாம் என்ற திசை நோக்கி நகரட்டும் இந்த வையம் என்ற உன்னதமான குறிக்கோளைக் கொண்டதுதான் இந்த அரசு. குறிப்பாக, கல்வி என்பதை அடிப்படை உரிமையாகச் செயல்படுத்திக் காட்ட நினைக்கக்கூடிய அரசாகவும் தமிழ்நாடு அரசு செயல்பட்டு வருகிறது. எந்தவொரு கல்லூரிச் சேர்க்கையாக இருந்தாலும்,அதற்கு வைக்கப்படும் நுழைவுத் தேர்வானது ஏழை எளிய, கிராமப்புற விளிம்பு நிலை மாணவ சமுதாயத்தை பாதிக்கும். அதனால் அந்தத் தேர்வுகளைத் தவிர்த்து, பள்ளிக் கல்வித் திறனை மட்டும் அடிப்படையாகக் கொண்டதாக கல்லூரி மாணவர் சேர்க்கை அமைய வேண்டும் என்பதில் மாற்றமுடியாத உறுதிப்பாடு கொண்டதாக இந்த அரசு இருக்கிறது.அதாவது, 12 ஆம் வகுப்பு
மதிப்பெண் அடிப்படையிலேயே கல்லூரி மாணவர் சேர்க்கை அமைய வேண்டும் என்பதில் இந்த அரசு உறுதியாக உள்ளது.

இந்த அடிப்படையில்தான்,முத்தமிழ் அறிஞர் தலைவர் கலைஞர் அவர்கள் மாநில அளவில் நடத்தப்பட்டு வந்த நுழைவுத் தேர்வுகளை,2007 ஆம் ஆண்டு அகற்றி, அதற்காகத் தனிச் சட்டம் இயற்றினார்கள்.அச்சட்டத்திற்கு மாண்புமிகு குடியரசுத் தலைவருடைய ஒப்புதலையும் பெற்று,கல்லூரி மாணவர்கள் சேர்க்கையில், ஏழையெளிய கிராமப்புற மாணவர்களின் நலன் காக்கப்படுவதை உறுதிசெய்தார்.இதன் அடிப்படையில்தான், பல ஆண்டுகளாக தமிழ்நாட்டிலே நடைபெற்று, திறன்மிக்க நம் மருத்துவ மாணவர்கள் மாணவர்களுக்கு பயிலக்கூடிய வாய்ப்பும் கிடைக்கப்பெற்றது. சேர்க்கையும் மருத்துவக் கல்வி இத்தகைய மருத்துவர்கள் மூலமாக இன்று மருத்துவத் துறையிலே நம் நாட்டிற்கே முன்னோடியாக நாம் விளங்கிக் கொண்டிருக்கிறோம்.

ஆனால்,கடந்த காலத்தில் ஒன்றிய அரசால் கொண்டுவரப்பட்ட நீட் தேர்வுக்கான திருத்தச் சட்டம்,அதன்பிறகு கொண்டுவரப்பட்ட தேசிய மருத்துவ ஆணையச் சட்டம் ஆகியன மருத்துவ மாணவர் சேர்க்கையில் நீட் தேர்வை முன்னிறுத்தி,நமது மாணவர்களை வெகுவாக பாதித்துள்ளன. மாநில அரசு நிதியிலிருந்து, மாநில அரசுகளால் தொடங்கப்படக்கூடிய மருத்துவக் கல்லூரிகளில் எவ்வாறு அம்மாநில மாணவர்களைச் சேர்க்க வேண்டும் என்பது குறித்து முடிவு செய்யக்கூடிய உரிமையை மாநில
அரசுகளிடமிருந்து பறித்து விட்டது ஒன்றிய அரசு.

இதுமட்டுமன்றி, நுழைவுத் தேர்வுக்கான சிறப்புப் பயிற்சிகளைப் பெறுவதற்கு வசதி வாய்ப்புகள் உள்ள மாணவர்களுக்கு மட்டுமே சாதகமாகவும்,மருத்துவ மாணவர் சேர்க்கையில் 12 ஆண்டுகள் படிக்கக்கூடிய பள்ளிக் கல்வியால் எவ்விதப் பயனும் இல்லை என்ற நிலையை உருவாக்கி,பள்ளிக் கல்வி அமைப்பையே அர்த்தமற்றதாக ஆக்குவதாகவும் இந்த நீட்’ தேர்வு முறை உள்ளது.

மாநில நிதியில் கட்டப்படும் மருத்துவக்கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான உரிமையை நீட் தேர்வு பறித்துவிட்டது.நீட் விலக்கு மசோதா ஆளுநரால் இன்னும் குடியரசு தலைவருக்கு அனுப்பப்படவில்லை என்றும் தெரிவித்தார்.தமிழ்நாட்டின் அனைத்துக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சந்திக்க மறுத்து வருகிறார்.

நீட் தேர்வு விலக்கு மசோதா பற்றி கடிதம் அளிக்க மத்திய உள்துறை அமைச்சர் நேரம் கொடுக்கவில்லை.இது மக்களாட்சி மாண்புக்கு எதிரானது. நீட் தேர்வுக்கு எதிரான சமூக நீதிக்கான போராட்டம் தொடரும். போராட்டங்கள் மூலமே வளர்ச்சி பெற்றுள்ளோம்.நீட் தேர்வு தொடர்பான அடுத்தகட்ட நடவடிக்கையை மேற்கொள்ள 8-1-2022(நாளை) அன்று அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெறும்.

அனைவரும் இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்ள வேண்டுமென்று சட்டமன்றக் கட்சிகளுடைய தலைவர்களை நான் அன்போடு கேட்டுக் கொள்கிறேன்;உரிமையோடு கேட்டுக் கொள்கிறேன்.நீங்களும் சேர்த்து நிறைவேற்றிய தீர்மானம்தான் அது.அதனால்,அதன் முக்கியத்துவத்தைக் கருதி,அனைத்து சட்டமன்றக் கட்சித் தலைவர்களும் இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும்.இந்தக் கூட்டத்தில் எடுக்கப்படக்கூடிய முடிவுகளின் அடிப்படையில் நீட் தேர்வுக்கு எதிரான,சமூக நீதிக்கான நமது போராட்டம் தொடரும்”என்று அறிவித்துள்ளார்.

அதன்படி,நீட் தேர்வு தொடர்பான அடுத்தகட்ட நடவடிக்கையை மேற்கொள்ள நாளை அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெறவுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்