முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள், திமுக தொண்டர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
அந்த கடிதத்தில், செப்டம்பர் மாதம் பிறந்தாலே கழக உடன்பிறப்புகள் ஒவ்வொருவருக்கும் சிலிர்ப்பும் புத்துணர்ச்சிப் பெருக்கும் வந்து விடும். ஆம்! இது நமக்கான மாதம்; திராவிடர்க்கான மகத்தான மாதம் என்ற எண்ணம் நம் உணர்வெங்கும் ஊற்றெடுத்து ஓடும். ஈரோட்டுப் பூகம்பம்-பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் பிறந்த மாதம், செப்டம்பர் மாதம்தான். அவருடைய லட்சியப் படையின் இணையற்ற தளபதியாக இயங்கிய பேரறிஞர் அண்ணா பிறந்த மாதமும் செப்டம்பர் மாதம்தான்.
பேரறிஞர் அண்ணாவால் உருவாக்கப்பட்ட நம் உயிரினும் மேலான இயக்கமாம் திராவிட முன்னேற்றக் கழகம் பிறந்த மாதமும் செப்டம்பர் மாதம்தான். அதனால் செப்டம்பர் மாதம் என்பது திராவிட இயக்கத்தின் தனிச் சொந்த மாதம்.
நம் உயிர்நிகர் தலைவர் முத்தமிழறிஞர் கலைஞர், செப்டம்பர் மாதத்தில் முப்பெரும் விழாவை முன்னெடுத்து, கழகத்தின் கொள்கை, பார்மீது பட்டி தொட்டியெங்கும் முழங்கும் சீர்மிகு திருவிழாவாக நடத்தி, நமக்கெல்லாம் நல்வழி காட்டியிருக்கிறார். கருத்தரங்கம், கவியரங்கம், பட்டிமன்றம், பேச்சரங்கம் உள்ளிட்ட இன்னும் பல வழிகளிலும் தலைவர் கலைஞரின் நேரடியான எழுச்சிப் பங்கேற்புடன் நடைபெற்ற முப்பெரும் விழாக்கள் எத்தனையெத்தனை! அத்தனையும் அவரைப் போலவே, நம் நெஞ்சை விட்டு சற்றும் நீங்காமல் பசுமையாகவே இருக்கின்றன.
இத்தனை சிறப்புமிக்க முப்பெரும் விழா இந்த ஆண்டு செப்டம்பர் 15-ம் நாள் பெருமைமிகு விருதுநகரில் நடைபெறுகிறது. விழா பிரமாண்டமாக அமையும் என்பதில் துளியும் அய்யமில்லை. ஆயிரமாயிரமாய், லட்சோப லட்சமாய் திரண்டு வரும் உடன்பிறப்புகளாம் உங்களின் வருகையால், கடல் இல்லா விருதையில், பொங்கு மாங்கடல் புகுந்ததோ என நினைக்கும் அளவுக்கு முப்பெரும் விழா சிறப்பாக நடைபெற உங்களில் ஒருவனான நான், கழகத் தலைவர் என்ற முறையில் அன்புடனும் பாசத்துடனும் அழைக்கிறேன்.
செப்டம்பர் 15, நம் கழகத்தை உருவாக்கிய பேரறிஞர் பெருந்தகை அண்ணாவின் பிறந்தநாள். அதனை மனதில் கொண்டு, அரசு தொடக்கப் பள்ளிகளில் காலைச் சிற்றுண்டி வழங்குகிற மகத்தான புதிய திட்டம் தொடங்கப்பட இருக்கிறது. 100 ஆண்டுகளுக்கு முன்பே பள்ளிகளில் இலவச உணவு வழங்கிய இயக்கம்தான் திராவிட இயக்கம். அன்று நீதிக்கட்சி இந்தியாவுக்கே வழிகாட்டும் வகையில் செயல்பட்டது.
அந்த நீதிக்கட்சியின் நீட்சியாக, கழகத்தின் திராவிட மாடல் அரசு, இந்தியாவுக்கே முன்னோடித் திட்டமாக காலைச் சிற்றுண்டித் திட்டத்தைத் தொடங்குகிறது. சங்கத் தமிழ் வளர்த்த மாமதுரையில் அதனைத் தொடங்கிவைத்து, அதன்பின் மாலையில் விருதுநகரில் உங்களை சந்திக்கும் விருப்பம் மேலிட ஓடோடி வருவேன். உடன் பிறப்புகளான உங்களையும், உங்களில் ஒருவனான என்னையும் ‘விருதை’ அழைக்கிறது.
முப்பெரும் விழாவில் கழகத்தின் மூத்த முன்னோடிகளை மதித்துப் போற்றும் பண்பின் அடிப்படையில் விருதுகள் வழங்கப்பட இருக்கின்றன. இந்த ஆண்டு பெரியார் விருது பெறுபவர் மிசா காலத்தில் தன் கணவரை சிறையில் அடைத்தபோதும் கலங்கி நிற்காமல் கழகம் காக்கும் பணியில் ஈடுபட்ட சம்பூர்ணம் சாமிநாதன் பதவிப் பொறுப்புகளைவிட கழகக் கொள்கை வழிப் பயணமே லட்சிய வாழ்வின் அடையாளம் எனச் செயலாற்றும் கோவை இரா.மோகன், அண்ணா விருது பெறவிருக்கிறார்.
உயிர்நிகர் தலைவர் கலைஞரின் கண்ணசைவுக் கேற்பக் களமிறங்கி அயராது கழகப் பணியாற்றி இன்று கழகத்தின் பொருளாளராக இருக்கின்ற டி.ஆர்.பாலு எம்.பி. கலைஞர் விருது பெறவிருக்கிறார். அருகில் உள்ள புதுச்சேரி மாநிலத்தில் கழகத்தினை வளர்ப்பதில் பெரும்பங்காற்றிய புதுச்சேரி சி.பி.திருநாவுக்கரசு, பாவேந்தர் விருது பெறவிருக்கிறார்.
கழகமே உயிர்மூச்சென வாழும் உடன்பிறப்புகளில் ஒருவரும் தலைமையின் கட்டளையை நிறைவேற்றுவதில் துடிப்புடன் செயலாற்றியவருமான குன்னூர் சீனிவாசன், பேராசிரியர் விருது பெறவிருக்கிறார்.
இந்த இனிய நிகழ்வில், இந்தியாவுக்கே வழிகாட்டும் வகையில், ஆட்சியியல் இலக்கணத்தைப் படைத்திருக்கும் கழகத்தின் திராவிட மாடல் அரசு பற்றிய எனது எண்ண ஓட்டங்கள் அடங்கிய புத்தகம் வெளியிடப்படவிருக்கிறது.
முத்தாய்ப்பாக, முத்தமிழறிஞர் கலைஞர் முரசொலியில் எழுதிக் குவித்த உடன்பிறப்புகளுக்குக் கடிதங்களின் 54 தொகுதிகள் வெளியிடப்பட இருக்கின்றன. அவருடைய அந்தக் கடிதங்களின் கண்ணசைவில்தானே, கடைக்கோடித் தொண்டனையும், தன் குடும்பத்துடன், முப்பெரும் விழாவுக்கு அழைத்து வந்தது.
‘உடன்பிறப்பே..’ என்று அவர் அழைத்தால், செவிமடுத்துச் செயலாற்றாத தொண்டர்கள் உண்டோ!
எந்த நிலையிலும் அவர் அழைப்பினைத் தட்டாமல், எதையும் எதிர்பாராமல் ஓடோடி வந்த உடன்பிறப்புகளால்தானே, இன்று இந்த இயக்கம், இந்தியாவுக்கு வழிகாட்டும் வகையில் சிறந்தோங்கி விளங்குகிறது!
நெருக்கடிகளிலும் சோதனைகளிலும் கழகத்தைக் கட்டிக் காத்த கலைஞரின் அன்பு உடன்பிறப்புகளை, உங்களில் ஒருவனாக நானும் அன்புடன் அழைக்கிறேன். செப்டம்பர் 15 அன்று விருதை நோக்கி விரைந்து வருக.. வெற்றி வரலாறு படைத்திடுவோம்!’ என தெரிவித்துள்ளார்.
ராபட் : ஃபிபா (FIFA) உலககோப்பை கால்பந்து போட்டியானது 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும். இறுதியாக ஃபிபா உலக கோப்பையை…
அலகாபாத் : உத்திர பிரதேச மாநிலம் அலகாபாத் மாவட்டத்தில் பிரயாக்ராஜ் பகுதியில் திரிவேணி சங்கமத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் மகா…
காசா : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் ஹமாஸ் போர் தற்போது முதற்கட்டமாக போர் நிறுத்தத்தை தொடங்கியுள்ளது.…
சென்னை : தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையானது வழக்கமாக அக்டோபரில் தொடங்கி டிசம்பர் வரை பெய்யும். தற்போது வடகிழக்கு பருவமழையின் தாக்கம்…
காஞ்சிபுரம் : சென்னை விமான நிலையத்தை அடுத்து, காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் பகுதியில் புதிய விமான நிலையம் அமைக்கும் திட்டத்தை…
டெல் அவில் : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் - ஹமாஸ் போரானது இன்று முதல் 6…