அவைக்குள் அதிமுகவை பங்கேற்க அனுமதிக்கவும் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்.!
சென்னை : சட்டப்பேரவை விவாதத்தில் அதிமுகவினர் பங்கேற்க அனுமதிக்க வேண்டும் என முதலமைச்சரின் வேண்டுகோளை ஏற்ற, சபாநாயகர் அப்பாவு அதிமுகவினருக்கு அனுமதியளித்து உத்தரவிட்டார்.
தமிழக சட்டபேரவை கூட்டத்தொடரின் இரண்டாம் நாளான இன்று அதிமுக எம்எல்ஏக்கள் கருப்பு சட்டையுடன் பங்கேற்றனர். சட்டப்பேரவை தொடங்கியதும் கள்ளக்குறிச்சி விஷச்சாராய மரண விவகாரத்தை விவாதிக்கக் கோரி அதிமுக, பாஜக, பாமக உள்ளிட்ட கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டன. பேரவைத் தலைவர் இருக்கை முன்பு அமர்ந்து Resign Stalin என்ற பதாகைகளை காட்டிஇபிஎஸ் உள்ளிட்ட அதிமுக எம்எல்ஏக்கள் தர்ணா செய்தனர்.
இதையடுத்து, கேள்வி நேரத்தை ஒத்திவைத்துவிட்டு, விஷச்சாராய விவகாரம் குறித்து விவாதிக்கக் கோரி கடும் அமளியில் ஈடுபட்ட அதிமுக எம்எல்ஏக்கள் குண்டுக்கட்டாக வெளியேற்றப்பட்டனர். பின்னர், அமளியில் ஈடுபட்டதால் இன்று ஒருநாள் அதிமுக எம்எல்ஏக்கள் அவைக்கு வர தடை விதித்தார் சபாநாயகர் அப்பாவு. பின்னர், சட்டப்பேரவையில் இருந்து வெளியேறிய அதிமுகவினர் செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்து வந்தனர்.
இந்நிலையில், சட்டப்பேரவையில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “ஜனநாயக முறையில் பேரவை நடைபெற வேண்டும் என்பதில் நான் அக்கறை கொண்டவன். கள்ளக்குறிச்சி சம்பவம் என் கவனத்திற்கு வந்தது, நடவடிக்கை எடுத்துள்ளேன். அதிமுகவினர் திட்டமிட்டு நாடகத்தை அரங்கேற்றம் செய்து பேரவை விதிகளுக்கும், மரபுகளுக்கும் மாறாக குழப்பம் ஏற்படுத்தியதால் வெளியேற்றப்பட்டுள்ளார்கள்.
அமளியில் ஈடுபட்ட அதிமுகவினர் வெளியேற்றப்பட்டு, இன்று ஒருநாள் அவை நடவடிக்கைகளில் பங்கேற்க விதித்த தடை உத்தரவை திரும்பப் பெற வேண்டும். பிரதான எதிர்க்கட்சிகளை விவாதத்தில் பங்கேற்க அனுமதிக்க வேண்டுமென சபாநாயகர் அப்பாவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்தார். முதலமைச்சர் கோரிக்கையை ஏற்று, சஸ்பெண்ட் செய்யப்பட்டதை ரத்து செய்து அவை நடவடிக்கையில் பங்கேற்க அதிமுக உறுப்பினர்களுக்கு சபாநாயகர் அனுமதி வழங்கினார்.