நாளை தூத்துக்குடி மாநகரின் தந்தை ராவ்பகதூர் குரூஸ் பர்னாந்தீஸ் சிலையை திறந்து வைக்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்..!
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள், நாளை காணொளி காட்சி வாயிலாக ரூ.77.87 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள தூத்துக்குடி மாநகரின் தந்தை ராவ்பகதூர் குரூஸ் பர்னாந்தீஸ் திருவுருவச் சிலையை திறந்து வைக்க உள்ளார்.
இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில், ‘ராவ்பகதூர் குரூஸ் பர்னாந்தீஸ் அவர்கள் தூத்துக்குடியில் 15.11.1869 அன்று பிறந்தார். அறிவுத் திறமையும், அறிவுக் கூர்மையும் கொண்டவர். உழைப்பால் உயர்ந்தவர். ஈடுபடும் செயலில் இடர்களும் தடைகளும் தொடர்ந்தாலும், அச்செயல் பலருக்கு பயன்படும் எனில், அதனை செய்து முடித்து வெற்றி காணும் மன உறுதி கொண்டவர் அவர்.
தூத்துக்குடி நகராட்சி தலைவராக 21.12.1909-இல் பொறுப்பேற்ற ராவ்பகதூர் குரூஸ் பர்னாந்தீஸ் அவர்கள் மக்களின் பேராதரவுடன் ஐந்து முறை தொடர்ந்து நகராட்சி மன்றத் தலைவராக விளங்கியுள்ளார். கடற்கரை நகரமான தூத்துக்குடி நீண்ட நெடுங்காலமாகவே குடிநீர் பிரச்சினையால் சிரமப்பட்டு வந்துள்ளது.
1927-ஆம் ஆண்டு தூத்துக்குடி மாவட்டம் மிகக் கடுமையான குடிநீர் பஞ்சம் ஏற்பட்டபோது மிகுந்த தொலைநோக்குப் பார்வையுடன், நெல்லை தாமிரபரணி ஆற்றிலிருந்து குழாய் மூலம் நீர் கொண்டு வரும் திட்டத்தினை சிறப்பாக செயல்படுத்தி, மக்களின் பாராட்டினை பெற்றார். இந்தக் குடிநீர்ப் பிரச்சினைகள் தீர்ந்தது மட்டுமல்லாமல் நகரின் பல வளர்ச்சிப் பணிகளையும் நிறைவேற்றியதனால் ராவ்பகதூர் குரூஸ் பர்னாந்தீஸ் அவர்கள் “தூத்துக்குடி மக்களின் தந்தை” என போற்றப்படுகிறார்.
துவங்கியது கந்தசஷ்டி திருவிழா… திருச்செந்தூர் முருகன் கோவிலில் ஏற்பாடுகள் தீவிரம்.!
இத்தகைய மாமனிதர் ராவ்பகதூர் குரூஸ் பர்னாந்தீஸ் அவர்களைப் போற்றும் வகையில் அவருக்கு தூத்துக்குடி மாநகராட்சியில் குவிமாடத்துடன் கூடிய முழு உருவச் சிலை அமைக்கப்படும் என தமிழ்நாடு அரசால் 13.11.2021 அன்று அறிவிக்கப்பட்டு, 14.10.2022 அன்று உரிய அரசாணை பிறப்பிக்கப்பட்டது.
அதன்படி, தமிழ்நாடு அரசின் சார்பில் தூத்துக்குடி மாநகராட்சி பூங்காவில் 77.87 இலட்சம் ரூபாய் செலவில் ராவ்பகதூர் குரூஸ் பர்னாந்தீஸ் அவர்களுக்கு குவிமாடத்துடன் கூடிய திருவுருவச் சிலையினை 14.11.2023 அன்று காலை 11.30 மணியளவில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் சென்னை தமைமைச் செயலகத்திலிருந்து காணொலிக் காட்சி வாயிலாக திறந்து வைக்கிறார்கள்.’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.