“நாளை முக்கிய அறிவிப்பொன்று வெளியாகிறது” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
அமைச்சர் தங்கம் தென்னரசு வெளியிட்ட அழைப்பிதழை தனது எக்ஸ் பக்கத்தில் இணைத்து, நாளை முக்கிய அறிவிப்பு வெளியாகுவதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
சென்னை: அமைச்சர் தங்கம் தென்னரசு எக்ஸ் தள பதிவை மீண்டும் தனது வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ‘நாளை முக்கிய அறிவிப்பு’ வெளியாகுவதாக அறிவித்துள்ளார். இந்த பதிவு அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. அதன்படி, அந்த அறிவிப்பு என்னவாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது
தமிழக நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தனது எக்ஸ் பக்கத்தில், இந்தியத் துணைக் கண்ட வரலாற்றின் கண்ணோட்டத்தை மாற்றி அமைக்கும் ‘இரும்பின் தொன்மை’ எனும் நூலை வெளியிட்டு கீழடி திறந்தவெளி அருங்காட்சியகம், கங்கைகொண்ட சோழபுரம் அருங்காட்சியகம் ஆகியவற்றுக்கு அடிக்கல் நாட்டுதல் மற்றும் கீழடி இணையதளத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.
இந்த நிகழ்வு நாளை (23.01.2025) காலை 10 மணி அளவில் சென்னை அண்ணா நூற்றாண்டு நூலக அரங்கில் நடைபெற உள்ளது என்று தெரிவித்திருந்தார். மேலும், அந்த பதிவில் இருந்த அழைப்பிதழில், “இரும்பின் தொன்மை’ நூலினை வெளியிட்டும், கீழடி திறந்தவெளி அருங்காட்சியகம் & கங்கைகொண்ட சோழபுரம் அருங்காட்சியகம் ஆகியவற்றிற்கு அடிக்கல் நாட்டியும் கீழடி இணையதளத்தினைத் தொடங்கி வைக்கப்பட இருக்கிறது. இவ்விழாவில் கலந்துகொண்டு சிறப்பிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்நிலையில், இந்த பதிவினை தனது எக்ஸ் பக்கத்தில் ரீ ட்வீட் செய்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “நாளை முக்கிய அறிவிப்பொன்று வெளியாகிறது! வாய்ப்புள்ளோர் வருகை தாருங்கள்! மற்றவர்கள் நேரலையில் காண வேண்டும்” என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.
நாளை முக்கிய அறிவிப்பொன்று வெளியாகிறது!
வாய்ப்புள்ளோர் வருகை தாருங்கள்! மற்றவர்கள் நேரலையில் காண வேண்டும்!@TThenarasu https://t.co/umbpC8ZmLs
— M.K.Stalin (@mkstalin) January 22, 2025