திருநெல்வேலி இருட்டுக்கடைக்கு திடீர் விசிட் அடித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
திருநெல்வேலி, கீழ ரத வீதியில் அமைந்துள்ள உலகப் புகழ்பெற்ற இருட்டுக்கடை அல்வா கடைக்கு சென்று, அல்வா வாங்கி சாப்பிட்டார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.
![MKstalin - NELLAI](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/MKstalin-NELLAI.webp)
நெல்லை : இரண்டு நாள் சுற்றுப்பயணமாக நெல்லை மாவட்டத்திற்கு சென்றுள்ள முதல்வர் ஸ்டாலின், அங்கு களஆய்வு மேற்கொண்டு பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
அதன்பிறகு, நெல்லையில் ரூ.66.04 கோடி மதிப்பிலான புதிய திட்டப் பணிகளை தொடங்கி முதல்வர் தொடங்கி வைத்தார். மேலும், மாற்றுக் கட்சியினர் திமுகவில் இணையும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். பின்னர், மாலை பொழுதில் கீழ ரத வீதியில் அமைந்துள்ள உலகப் புகழ்பெற்ற இருட்டுக்கடை அல்வா கடைக்கு நேரில் சென்று, அல்வாவினை வாங்கி சாப்பிட்டதோடு, கடை உரிமையாளரிடம் உரையாடினார்.
இது குறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், “நேற்று (6.22025) மாலை, திருநெல்வேலியில் பல ஆண்டுகளாக புகழுடன் விளங்கும் இருட்டுக்கடை அல்வா கடைக்கு திடீரெனச் சென்ற முதலமைச்சர், கடை ஊழியர்களைக் கண்டு அல்வா தயாரிப்பு முறை, விற்பனை குறித்து விசாரித்து அறிந்து கொண்டார்கள்.
சற்றும் எதிர்பாராமல் முதலமைச்சர் இருட்டுக்கடை அல்வா கடைக்கு வந்து தங்களுடன் பேசியது இன்ப அதிர்ச்சியாக இருந்தது என்று அல்வாக் கடையினர் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர். அத்துடன் அந்தக் கடையில் கூடியிருந்த பொதுமக்களும் முதலமைச்சர் கண்டதும் ஆச்சரியம் அடைந்தனர்.
முதலமைச்சர் இவ்வளவு எளிமையாக எல்லோருடனும் நெருங்கி வந்து பழகுவது பெருத்த சந்தோசத்தை எங்களுக்கு ஏற்படுத்தியது என்றும் கூறி, முதலமைச்சரை பாராட்டினார்கள்” இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.