ஊட்டியில் அரசு மருத்துவமனையை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.!
ஊட்டி எச்.பி.எப். பகுதியில் புதிதாக கட்டப்பட்டுள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை மற்றும் மருத்துவ ஊழியர்களுக்கான குடியிருப்பு கட்டிடங்கள் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

நீலகிரி : உதகையில் ரூ.143.69 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். மேலும் 1,703 முடிவுற்ற திட்டப்பணிகளை தொடங்கி வைக்கும் முதலமைச்சர், 15,634 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார்.
இந்த அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை தமிழ்நாட்டின் நீலகிரி மாவட்டத்தில் உள்ள உதகமண்டலம் (ஊட்டி) பகுதியில் அமைந்துள்ள ஒரு முக்கியமான சுகாதார உள்கட்டமைப்பு திட்டமாகும். இந்தியாவில் சிம்லாவுக்கு அடுத்தபடியாக மலைப் பிரதேசத்தில் கட்டப்பட்ட இரண்டாவது மருத்துவக் கல்லூரி மருத்துவமனையாக, உதகை மருத்துவக்கல்லூரி மருத்துவமனை அமைந்துள்ளது.
இந்த மருத்துவமனை ஊட்டியில் உள்ள எச்.பி.எப் பகுதியில், வனத்துறை மற்றும் கால்நடை பராமரிப்பு துறைக்கு சொந்தமான 40 ஏக்கர் நிலத்தில் கட்டப்பட்டுள்ளது. மலைப்பிரதேச சூழலுக்கு ஏற்ப, கீழ் தளம் மற்றும் முதல் தளம் என்ற வடிவமைப்பில் இது அமைக்கப்பட்டுள்ளது.
700 படுக்கை வசதிகளுடன் 21 துறைகளுடன் அவசர சிகிச்சை பிரிவு, அறுவை சிகிச்சை அரங்குகள், பிரசவ பிரிவு, மற்றும் நவீன ஆய்வகங்கள் உள்ளன. நவீன மருத்துவ உபகரணங்கள், சி.டி. ஸ்கேன், எம்.ஆர்.ஐ, மற்றும் டிஜிட்டல் எக்ஸ்-ரே வசதிகள் இதில் அடங்கும்.