“இபிஎஸ் குற்றச்சாட்டுகளை மதிப்பதே இல்லை”.. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
மழை தொடர்பாக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமியின் குற்றச்சாட்டை நாங்கள் மதிப்பதில்லை என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேட்டியளித்துள்ளார்.
சென்னை: சென்னையில் ஃபெஞ்சல் புயல் மற்றும் மழை பாதிப்புகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்தார். அப்போது, தனது சொந்த தொகுதியான கொளத்தூரில் செல்வி நகர், GKM காலனி உள்ளிட்ட பகுதிகளுக்கு நேரில் சென்று மக்களிடம் குறைகளைக் கேட்டறிந்தார்.
இதனையடுத்து, கொளத்தூர், பெரியார் நகர் அரசு மருத்துவமனையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டு, அங்கு சிகிச்சை பெரும் நோயாளிகளிடம் நலன் விசாரித்தார்.
இந்த ஆய்வின் போது அமைச்சர் சேகர்பாபு, மாநகராட்சி மேயர் பிரியா ராஜன் உள்ளிட்டோர் உடனிருந்தனர். கொளத்தூரில் ஆய்வு செய்த பின்னர், கனமழை தொடர்பாக அரசின் செயல்பாடுகள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
இது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், “தலைநகரம் சென்னை தத்தளிக்கவும் இல்லை, தப்பிக்கவும் இல்லை, நிம்மதியாக உள்ளது. சென்னையில் மழை நின்றதும் தண்ணீர் முழுவதுமாக வடிந்துவிடும். மழை பாதிப்பு உள்ள பகுதிகளில் மீட்புப் பணிகளை துரிதப்படுத்த அமைச்சர்களை அனுப்பியுள்ளோம்.
விழுப்புரத்திலும் இன்னும் மழை நிற்கவில்லை, மழை நின்றதும் தண்ணீர் வடிந்துவிடும். விழுப்புரம், கடலூரில் நிவாரண பணியை துரிதப்படுத்த அமைச்சர்களை அனுப்பி வைத்துள்ளேன், துணை முதலமைச்சரும் செல்கிறார்.
மழை தொடர்பாக இபிஎஸ் எழுப்பிய குற்றச்சாட்டுகள் குறித்த செய்தியாளர் கேள்விக்கு பதிலளித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “எடப்பாடி பழனிசாமியின் குற்றச்சாட்டுகளை மதிப்பதே இல்லை.. கவலைப்படுவதும் இல்லை” என்றார்.
ஃபெஞ்சல் புயல் பாதிப்புகள் குறித்து ஆய்வு மற்றும் நிவாரணப்பணிகளை மேற்கொள்ள விழுப்புரம், கடலூர் மாவட்டத்திற்கு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேரில் செல்ல இருக்கிறார். மேலும் அம்மாவட்டங்களில் அமைச்சர்கள் அதிகாரிகள் முகாமிட்டு, மீட்புப் பணிகளை துரிதப்படுத்தி வருகின்றனர்.
ஃபெஞ்சல் புயல் மற்றும் மழை பாதிப்புகளை அரசு திறமையோடு கையாண்டு வருகிறது. ஆனால், தண்ணீர் தேங்கிய பழைய வீடியோக்களை பரப்பி வருகின்றனர். மக்கள் பாதுகாப்பாக உள்ளனர், தேவையான நடவடிக்கை எடுக்கப்படுகிறது. வானிலை முன்னெச்சரிக்கை அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படுகிறது” இவ்வாறு கூறினார்.