விநாயகர் சதுர்த்தி வாழ்த்து தெரிவித்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி.!
நாளை விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு தமிழக மக்களுக்கு முதல்வர் பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக முதல்வர் வெளியிட்டு உள்ள அறிக்கையில், வேண்டுவோருக்கு வேண்டுவன அருளும் விநாயகப் பெருமான் அவதரித்த தினமான விநாயகர் சதுர்த்தி திருநாளை மகிழ்ச்சியுடன் கொண்டாடும் மக்கள் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள் தெரிவித்துக் கொள்கிறேன்
“விநாயகனே வெவ்வினையை வேரறுக்க வல்லான் விநாயகனே வேட்கை தணிவிப்பான் – விநாயகனே விண்ணிற்கும் மண்ணிற்கும் நாதனுமாம் தன்மையினாற் கண்ணிற் பணிமின் கனிந்து”
என்ற பதினொன்றாம் திருமுறை பாடலில், வினைகளின் வேரையே களைந்தெறியும் வல்லவர் என்று வேழமுகத்து பெருமானின் பெருமை குறித்து கூறப்பட்டுள்ளது. முழுமுதற் கடவுளான விநாயகப் பெருமானின் அவதாரம் திருநாளில், மக்கள் தங்கள் இல்லங்களில், களிமண்ணால் செய்யப்பட்ட விநாயகர் சிலைகளை வைத்து அருகப்பும், எருக்கம் பூ செம்பருத்திப் பூ அரளி மலர், வில்வ இலை போன்றவைகளைக் கொண்டு பாலைகள் சூட்டி கொழுக்கட்டை, கண்ட பொரி, அவல், கரும்பு, பழங்கள் போன்றவற்றை படைத்து, பக்தியுடன் வழிபட்டு விநாயகர் சதுர்த்தியை கொண்டாடி மகிழ்வார்கள்.
கணங்களின் தலைவனான விநாயகப் பெருமானின் திருவருளால், மக்கள் அனைவரது வாழ்விலும் இன்பம் பெருகி, நலமும் வளமும் பெற்று மகிழ்வுடன் வாழ்ந்திட வேண்டும் என்று வாழ்த்தி, அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை எனது விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள் உரித்தாக்கிக் கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.