அரசியல் கட்சிகளுக்கு தலைமை தேர்தல் அதிகாரி வேண்டுகோள்….
- பகல் நேரத்தில் கொளுத்தும் வெயிலில் தேர்தல் பிரசார கூட்டம் நடத்தக் கூடாது.
- அரசியல் கட்சிகள் நடத்தும் பொதுக்கூட்டங்களில் குடிநீர், முதலுதவிவசதிகள் இருக்க வேண்டும்.
தேர்தல் நெருங்கி வருவதையடுத்து, அனைத்து கட்சிகளிலும் தேர்தல் முன்னேற்பாடுகள் மிக தீவிரமாக நடைபெற்று வருகிறது. அனைத்து கட்சிகளும் தேர்தல் பணிகளில் முழுவீச்சுடன் களமிறங்கியுள்ளனர்.
இந்நிலையில், தேர்தல் ஆணையம் பல விதிமுறைகளை விதித்துள்ளது. காவல்துறையினருக்கு இது குறித்த ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளது. மேலும், அனைத்து வாகனங்களும் தீவிர சோதனைக்கு உட்படுத்தப்படுகிறது.
இந்நிலையில், அனைத்து கட்சிகளும் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனையடுத்து தலைமை தேர்தல் அதிகாரியான சத்ய விரத சாஹு அனுப்பிய சுற்றறிக்கையில், ” பகல் நேரத்தில் கொளுத்தும் வெயிலில் தேர்தல் பிரச்சார கூட்டம் நடத்தக் கூடாது” என்று தெரிவித்துள்ளார்.
அரசியல் கட்சிகள் நடத்தும் பொதுக்கூட்டங்களில் குடிநீர், முதலுதவி வசதிகள் இருக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். மேலும் வெப்பம் தாங்காமல் சிலர் உயிரிழந்ததாக கிடைத்த தகவலை தொடர்ந்து தேர்தல் ஆணையம் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாக கூறியுள்ளார்.