சென்னை…விழுப்புரம் மாவட்டங்களில் இந்த தேதியில் மழைக்கு வாய்ப்பு! அலர்ட் கொடுத்த டெல்டா வெதர்மென்!
கடலூர் , புதுச்சேரி , மயிலாடுதுறை , காரைக்கால் உள்ளிட்ட பல மாவட்டங்களில் வரும் டிசம்பர் 16 முதல் 20 வரை மழைக்கு வாய்ப்பு இருப்பதாக டெல்டா வெதர்மேன் ஹேமச்சந்தர் தகவலை தெரிவித்துள்ளார்.
சென்னை : டிசம்பர் டிச.16-20-ம் தேதி வரை தமிழகத்தின் சில மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதால் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு டெல்டா வெதர்மேன் தகவலை தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் வலைத்தள பக்கத்தில் கூறியதாவது ” தெற்கு அந்தமான் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இது அடுத்த 36 மணி நேரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறும்.
இது அடுத்த 36 மணி நேரத்தில் தமிழ்நாடு கடற்கரையில் தென்மேற்கு வங்காள விரிகுடாவை நோக்கி மேற்கு-வடமேற்கு திசையில் நகரும். இதன் காரணமாக டிச.16-20-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு இருக்கிறது. அதன்படி, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் , செங்கல்பேட்டை , விழுப்புரம் , கடலூர் , புதுச்சேரி , மயிலாடுதுறை , காரைக்கால் , நாகப்பட்டினம் , திருவாரூர் , அரியலூர், கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் டிச.16 முதல் 20 வரை எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்” என கூறியுள்ளார்.
மேலும், சென்னை வானிலை ஆய்வு மையம் கொடுத்த தகவலின் படி 16 -ஆம் தேதி கடலோர தமிழகத்தில் அநேக இடங்களிலும், உள் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். இராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மற்றும் காரைக்கால் பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
17-ஆம் தேதி தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நாகப்பட்டினம், திருவாரூர், கடலூர், மயிலாடுதுறை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில், காரைக்கால் பகுதிகளில் கன முதல் மிக கனமழையும், தஞ்சாவூர், அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, திருச்சிராப்பள்ளி, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில், புதுவையில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது என தெரிவித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.