16 மணிநேரம் பணிநேரம்.? வேலை நிறுத்தத்தை தொடங்கிய ஸ்விகி ஊழியர்கள்.!
சென்னையில் குறிப்பிட்ட மண்டலங்களில் சுவிக்கி வேலை நேரம் 12 மணிநேரத்தி இருந்து 16 மணிநேரமாக அதிகரிக்கப்பட்டுள்ளதாம். இதன் காரணமாக குறிப்பிட்ட மண்டல சுவிக்கி ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுப்பட்டுள்ளனர்.
உணவு டெலிவரி செய்யும் பிரபல நிறுவனமான சுவிக்கி நிறுவனத்தின் ஊழியர்கள் நேற்று முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். அதற்கு காரணமாக பணி நேரம் அதிகரிக்கப்பட்டதையும், ஊக்கத்தொகை குறைக்கப்பட்டதையும் சுட்டிக்காட்டியுள்ளனர். இதனை எதிர்த்து ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
சென்னையில் உள்ள பல சுவிகி மண்டலங்களில் குறிப்பிட்ட சில மண்டலங்களுக்கு மட்டும் இந்த புதிய நடைமுறை அமலுக்கு வந்துள்ளதாம். அதன்படி வேலை நேரம் 12 மணி நேரத்தில் இருந்து 16 மணி நேரமாக அதிகரிக்கப்பட்டுள்ளதாம். இதன் மூலம்வார வருமானம் 14,000இல் இருந்தது தற்போது 12000 கூட பெற முடியாதபடி இந்த நடைமுறை உள்ளதாம்.
இந்த வருமானத்தில் பெட்ரோல், உணவு, வாகன செலவு போன்றவை போக வாரம் 7 ஆயிரம் மட்டுமே கிடைக்கும். இதன் காரணமாக சென்னையில் முதற்கட்டமாக அந்த மண்டல ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் நேற்று முதல் ஈடுபட்டு உள்ளனர் என தகவல் வெளியாகியுள்ளது.
இந்த நடைமுறை படிப்படியாக அடுத்தடுத்த மண்டலங்களுக்கும், மாவட்ட வாரியாகவும் நடைமுறைப்படுத்தப்படும் என்றும் கூறப்படுகிறது. இதனைக் குறிப்பிட்டு முன்பு வழங்கப்பட்டதை போலவே முறையான ஊக்கத்தொகை வழங்கும் வரை தாங்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட போவதாக சுவிகி ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.