செந்தில் பாலாஜி எப்போது ரிலீஸ்.? “இன்னும் உத்தரவு கிடைக்கவில்லை.,” சென்னை நீதிமன்றம் பதில்.!
செந்தில் பாலாஜிக்கு உச்சநீதிமன்றம் வழங்கிய ஜாமீன் இன்னும் கிடைக்கப்பெறவில்லை என்று சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
சென்னை : சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கில் அமலாக்கத்துறையால் கைதாகியிருந்த முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு, இன்று உச்சநீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியது. ரூ.25 லட்சம் பிணை, அமலாக்கத்துறை அலுவலகத்தில் கையெழுத்து உள்ளிட்ட நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன.
இந்த நிபந்தனை ஜாமீன் உத்தரவுக்கான நகல் முதலில் , செந்தில் பாலாஜி மீதான சட்டவிரோத பணப்பரிவர்த்தனை புகாரை விசாரிக்கும் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்திற்கு அனுப்பப்டும். அதன் பிறகு அமலாக்கத்துறை நீதிமன்ற காவல் நிறுத்திவைக்கப்பட்டு திகார் சிறையில் இருந்து செந்தில் பாலாஜி விடுதலை செய்யப்படுவார்.
இப்படியான சூழலில் இன்று சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் வீடியோ கால் மூலம் ஆஜர்படுத்தப்பட்டார் செந்தில் பாலாஜி. அப்போது செந்தில் பாலாஜி தரப்பு வழக்கறிஞர் , உச்சநீதிமன்ற ஜாமீன் தீர்ப்பை சுட்டிக்காட்டினார். அதற்கு , உச்சநீதிமன்ற ஜாமீன் நகல் இன்னும் எங்களுக்கு வந்து சேரவில்லை என்று சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி கார்த்திகேயன் தெரிவித்தார்.
இதனை அடுத்து, தற்போது நீதிமன்ற காவல் நீட்டிப்பு உத்தரவை தற்காலிகமாக நிறுத்தி வைத்து, வழக்கு இன்று பிற்பகலில் விசாரிக்கப்படும் என சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டது. அதற்குள் உச்சநீதிமன்ற நகல் கிடைக்கப்பெற்ற பின், முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நீதிமன்ற காவல் நிறுத்திவைக்கப்படும். பின்னர், திகார் சிறைக்கு ஜாமீன் உத்தரவு நகல் அனுப்பப்பட்டு முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீனில் வெளியே வருவார் எனக் கூறப்படுகிறது.