குண்டர் சட்டத்திற்கு எதிர்ப்பு – பப்ஜி மதன் மனு பற்றி பதில்தர ஆணை

குண்டர் சட்டத்தை ரத்து செய்யக்கோரும் பப்ஜி மதன் மனு பற்றி சென்னை காவல் ஆணையர் பதில்தர உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
யூ -டியூப்பில் ஆபாசமான பேச்சுக்களை பேசி வீடியோக்களை பதிவிட்டு வந்த பப்ஜி மதனை, கடந்த ஜூன் மாதம் 18 ஆம் தேதி சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து வழக்கு பதிவு செய்தனர்.இந்த வழக்கில் மதன் மீது கடந்த ஜூலை மாதம் 6 ஆம் தேதி குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டு,அவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.
இதனையடுத்து,குண்டர் சட்டத்தில் சிறையில் உள்ள பப்ஜி மதனை நேற்று அறிவுரைக் கழகத்தில் ஆஜர்படுத்த காவல்துறையினர் அழைத்து வந்தனர்.சென்னை மாவட்ட ஆட்சியர் ஆலுவலகத்தில் உள்ள இந்த அறிவுரைக் கழகத்தில் ஓய்வு பெற்ற நீதிபதிகள் முன்பு மதன் ஆஜர்படுத்தப்பட்டார்.
இதனைத் தொடர்ந்து,குண்டர் சட்டத்தை ரத்து செய்யக்கோரி பப்ஜி மதன் கடந்த இரு தினங்களுக்கு முன்னர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார்.அம்மனுவில்,தனது பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் நோக்கில் தொழில் போட்டியாளர்கள் தனது வீடியோவை எடிட் செய்து அவ்வாறு பதிவேற்றியுள்ளனர் என்று கூறி,தன்மீது போடப்பட்ட குண்டர் சட்டத்தை ரத்து செய்யக் கோரினார்.
இந்நிலையில்,இந்த மனுமீதான விசாரணை இன்று உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.அப்போது,குண்டர் சட்ட நடவடிக்கையை ரத்து செய்யக்கோரும் பப்ஜி மதன் வழக்கில் சென்னை காவல் ஆணையர் பதில்தர வேண்டும் என்று கூறி உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.