சென்னை பெரம்பூர் நகைக்கடை கொள்ளை – கொள்ளையர்களிடம் இருந்து 4.5 கிலோ நகைகள் பறிமுதல்..!
பெரம்பூர் நகைக்கடை கொள்ளை வழக்கில் கைதான நபர்களிடமிருந்து 4.5 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
கடந்த மாதம் 10-ஆம் தேதி சென்னை பெரம்பூரில் இயங்கி வரும் ஓர் தனியார் நகைக்கடையில் நள்ளிரவில் நகை கொள்ளையடிக்கபட்டுள்ளது. வழக்கம் போல கடையின் உரிமையாளர் கடையை பூட்டிவிட்டு சென்றுள்ளார்.
பெரம்பூர் நகைக்கடை கொள்ளை
நள்ளிரவில் கொள்ளையர்கள் முதலில் வெல்டிங் மிஷின் கொண்டு கடையின் கதவை துளையிட்டு உள்ளே சென்ற அந்த கும்பல், நகை வைக்கப்பட்டு இருக்கும் அந்த பெட்டகத்தையும் வெல்டிங் வைத்து அறுத்து உள்ளே இருந்த 9 கிலோ தங்க நகைகளையும், 20 லட்சம் மதிப்புள்ள வைர கற்களையும் திருடி சென்றதாக தகவல் வெளியாகி இருந்தது.
இருவர் கைது
இதனையடுத்து, சென்னை பெரம்பூர் ஜே.எல். நகைக்கடையில் கொள்ளையில் ஈடுபட்டவர்களை பிடிக்க 6 தனிப்படை அமைத்து, குற்றவாளிகளை தீவிரமாக தேடும் பணியில் காவலர்கள் ஈடுபட்டிருந்த நிலையில், 4-ஆம் தேதி கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட இருவரை பெங்களூரில் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
4.5 கிலோ தங்கம் பறிமுதல்
இந்த நிலையில், பெரம்பூர் நகைக்கடை கொள்ளை வழக்கில் கைதான நபர்களிடமிருந்து 4.5 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. பெங்களூர் போலீசார் கைபற்றிய 2.4 கிலோ தங்க நகைகளை நீதிமன்றத்தில் உரிமை கோரி போலீசார் பெற்றனர்.
நகைகளை உருக்கிய கொள்ளையர்கள் 2 கிலோ நகையை உருக்கவில்லை என்றும், உருக்கப்பட்ட 3.5 கிலோ நகைகள், உருக்கப்படாத ஒரு கிலோ என இதுவரை 4.5 கிலோ தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என போலீசார் தெரிவித்துள்ளனர்.
மேலும், கங்காதரன், ஸ்டீபன் ஆகியோர் கைது செய்யப்பட்ட நிலையில், அருண், கௌதம் ஆகியோரை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.