நாராயணபுரம் ஏரி கரை உடைந்தது.! சென்னை பள்ளிக்கரணையில் பெருகும் வெள்ளம்.!
வங்கக்கடலில் உருவான மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பெய்த அதி கனமழை காரணமாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள நீர்நிலைகள் நிரம்பி தண்ணீர் திறக்கப்பட்டு வந்தன. மேலும் வீதிகளில் தேங்கிய மழைநீரும் பல்வேறு பகுதிகளில் பெருக்கெடுத்து ஓடியது.
இந்த மழைநீரை அகற்றும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். மீட்பு படையினர் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்து வருகின்றனர். சென்னை முக்கிய பகுதிகளில் மழைநீர் வடிந்து சில இடங்களில் சாலை போக்குவரத்து துவங்கியுள்ளது.
இந்நிலையில், சென்னை புறநகர் பகுதியான பள்ளிக்கரணையில் வெள்ள நீர் மெல்ல மெல்ல வடிந்து வந்த நிலையில், தற்போது புதிய பாதிப்பாக, அப்பகுதியில் இருந்த நாரணாயணபுரம் ஏரி நிரம்பி அதன் கரைப்பகுதி உடைந்தது. இதனால் நாராயணபுரம் ஏரியில் இருந்து தண்ணீர் அதிகப்படியாக வெளியேறிவருகிறது.
இதனால், பள்ளிக்கரணை பகுதியில் மீண்டும் மழைநீர் அதிகரிக்க துவங்கியுள்ளது. ஏற்கனவே அடுக்குமாடி குடியிருப்புகளில் மேல் தளங்களின் வசிக்கும் மக்கள் தற்போது மேலும் பாதிப்படைந்து வருகின்றனர். தற்போது அவற்றை சீர் செய்யும் வேலையில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.