இந்த தேதியில் பீனிக்ஸ் மாலுக்கு சென்றவர்களுக்கு சென்னை மாநகராட்சி ஓர் அறிவிப்பு.!
இந்தியாவில் கொரோனா வைரஸ் தீவிரமடைந்து வருவதால், மத்திய மாநில அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. இந்த நிலையில் தமிழகத்தில் கொரோனா வைரசால் பாதித்தவர்களின் எண்ணிக்கை 309 ஆக உயர்ந்துள்ளது. இதனால் வைரஸ் பரவாமல் இருக்க தமிழக அரசு பல்வேறு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்த நிலையில் சென்னையில் பிரபல பீனிக்ஸ் வணிக வளாகத்தில் பணியாளர்கள் 3 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. வேளச்சேரியில் உள்ள பீனிக்ஸ் வணிக வளாகத்தில் எப்போதும் கூட்டம் அதிகமாக காணப்படும். மேலும் இளைஞர்கள், இளம்பெண்கள் என ஏராளமானோர் அங்கு நேரத்தை செலவிட வந்து செல்வது வழக்கமான ஒன்று. ஆனால், தற்போது அங்கு பணிபுரியும் ஊழியருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளதால் மக்களிடையே பதற்றம் நிலவி வருகிறது.
இந்நிலையில், சென்னை மாநகராட்சி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், பீனிக்ஸ் வளாகத்தில் உள்ள லைப்ஸ்டைல் கடையில் பணிபுரிந்த 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில் அங்கு வேலை பார்த்த மற்றவர்கள் தற்போது வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர் என தெரிவித்துள்ளனர். மேலும் மார்ச் 10ம் தேதி முதல் 17ம் தேதி வரை பீனிக்ஸ் மாலுக்கு சென்று வந்தவர்கள் முக்கியமாக லைப்ஸ்டைல் கடைக்கு சென்றவர்களுக்கு ஏதேனும் கொரோனா அறிகுறி தெரிந்தால் உடனடியாக சென்னை கட்டுப்பாடு அறைக்கு தகவல் தெரிவிக்குமாறும் கேட்டுக்கொண்டனர். இல்லையென்றால் தாங்களாகவே முன்வந்து சுய பரிசோதனை செய்யுமாறு சென்னை மாநகராட்சி அறிவுறுத்தியுள்ளது.