மிக்ஜாம் புயலின் தற்போதைய நிலை… வானிலை ஆய்வு மையம் புதிய தகவல்.!
சென்னையை புரட்டி போட்ட மிக்ஜாம் புயல் (Michaung Cyclone) தற்போது வெகுவாக குறைந்து சென்னையை விட்டு விலகி மக்களை சற்று நிம்மதி அடைய வைத்துள்ளது. மழையின் அளவு குறைந்தாலும் இன்னும் தேங்கிய மழைநீர் வடியாத காரணத்தால் மக்கள் பெரும் அவதிக்கு உள்ளாகி உள்ளனர். இதனால் இன்றும் சென்னை , செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களுக்கு பொதுவிடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
மிக்ஜாம் புயல்.! பொது போக்குவரத்து ரத்து… பொது தேர்வுகள் ரத்து… உதவி எண்கள் இதோ…
சென்னையை நெருங்கி இருந்த மிக்ஜாம் புயலானது தற்போது சென்னையை விட்டு விலகியுள்ளது. இது குறித்து தென்மண்டல வானிலை ஆய்வு மைய தலைவர் பாலச்சந்திரன் வெளியிட்ட வீடியோவில், மிக்ஜாம் புயலானது தற்போது ஆந்திர மாநிலம் நெல்லூரில் இருந்து வடக்கே 30 கிமீ தொலைவிலும், சென்னையில் இருந்து 170 கிமீ தொலைவிலும் நிலைகொண்டுள்ளது என்று தெரிவித்தார்.
மேலும், இந்த மிக்ஜாம் புயலானது வடக்கு நோக்கி நகர்ந்து ஆந்திர மாநிலம் தெற்கு கடற்கரை பகுதியான பாபட்லா கடற்கரை பகுதியில் இன்று முற்பகல் கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மைய தலைவர் பாலச்சந்திரன் வீடியோ மூலம் தெரிவித்துள்ளார்.
கடந்த 24 மணிநேரத்தில், சென்னை பகுதியில் நுங்கம்பாக்கத்தில் 24 செமீ மழையும், மீனம்பாக்கத்தில் 19 செமீ மழையும், காட்டுப்பாக்கத்தில் 29 செமீ மழையும், பள்ளிக்கரணை பகுதியில் 17 செமீ மழையும், அண்ணா பல்கலைக்கழகம் பகுதியில் 18 செமீ மழையும், நந்தனம் பகுதியில் 18 செமீ மழையும் பெய்துள்ளது எனவும் பாலச்சந்தரன் தெரிவித்தார்.