தொடரும் வடகிழக்கு பருவமழை… தென் தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு!
இன்று நெல்லை மாவட்டத்தில் மிக கனமழையும், தூத்துக்குடி, கன்னியாகுமரி, ராமநாதபுரம் மாவட்டங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
சென்னை : தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையானது வழக்கமாக அக்டோபரில் தொடங்கி டிசம்பர் வரை பெய்யும். தற்போது வடகிழக்கு பருவமழையின் தாக்கம் ஜனவரி இறுதி வரை தொடர்ந்து வருகிறது. நேற்று முதல் தமிழக்த்தில் தென் தமிழகம் மற்றும் மயிலாடுதுறை , சென்னை உள்ளிட்ட சில பகுதிகளில் மழை பெய்தது.
நேற்று மயிலாடுதுறையில் தரங்கம்பாடி , பொன்னேரி, செங்குன்றம் ஆகிய பகுதிகளிலும், சென்னையில் மீனம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளிலும் பரவலாக மழை பெய்தது. அதனை தொடர்ந்து சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், கடலூர், விழுப்புரம், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தென்காசி மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்து இருந்தது.
இதனை தொடர்ந்து தற்போது வெளியான தகவலின்படி, இன்று (ஜனவரி 19) முதல் நாளை (ஜனவரி 20) காலை 8.30 மணி வரையில் தென்தமிழகத்தில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும், திருநெல்வேலியில் மிக கனமழையும், தூத்துக்குடி, கன்னியாகுமரி, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவும் வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.