ஓபிஎஸ் கோரிக்கை நிராகரிப்பு… ஆனா இதற்கு தடையில்லை – ஐகோர்ட்
OPS: இரட்டை இலை சின்னம், அதிமுக கொடி ஆகியவற்றை பயன்படுத்த அனுமதி கோரி முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது.
அதிமுகவின் பெயர், கொடி, சின்னம் மாற்றம் லெட்டர் பேடு ஆகியவற்றை ஓ.பி.எஸ். பயன்படுத்த சென்னை உயர்நீதிமன்ற தனி நீதிபதி தடை விதித்திருந்தார். இதனை எதிர்த்து ஓபிஎஸ் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார். அதில், தனி நீதிபதி விதித்த தடையை விலக்க வேண்டும் என்றும் இரட்டை இலை சின்னம், அதிமுக கொடியை பயன்படுத்த அனுமதி அளிக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்திருந்தார்.
இந்த மேல்முறையீடு மனு மீதான விசாரணை இன்று சென்னை ஐகோர்ட் நீதிபதிகள் ஆர்.சுப்பிரமணியன், சக்திவேல் ஆகிய அடங்கிய அமர்வு முன்பு நடைபெற்றது. அப்போது, இரட்டை இலை சின்னம், அதிமுக கொடி ஆகியவற்றை பயன்படுத்த அனுமதி கோரி முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது.
அதுமட்டுமில்லாமல், ஓ.பன்னீர்செல்வத்தின் மேல்முறையீட்டு மனு குறித்து அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பதிலளிக்கவும் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. அதாவது, அதிமுகவின் சின்னம், கொடியை பயன்படுத்த ஓபிஎஸ்க்கு தடை விதிக்கப்பட்டது தொடர்பாக இடைக்கால ஆணை பிறப்பிக்க மறுப்பு தெரிவிக்கப்பட்டது.
இதனால், ஓபிஎஸ்க்கு விதிக்கப்பட்ட தடை தொடர்கிறது. ஓபிஎஸ் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கின் இறுதி விசாரணையை ஜூன் 10ம் தேதிக்கு ஒத்திவைத்து இரு நீதிபதிகள் அடங்கிய அமர்வு உத்தரவிட்டது. மேலும், இரட்டை இலை சின்னம் கோரி தேர்தல் ஆணையத்தை ஓபிஎஸ் அணுக தடையில்லை எனவும் தெரிவிக்கப்பட்டது. இதனிடையே, வரும் நாடாளுமன்றம் மக்களவை தேர்தலில் பாஜக கூட்டணியில் ராமநாதபுரத்தில் போட்டியிடும் ஓ.பன்னீர்செல்வம், இன்று தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.