தனித்தேர்வர்களுக்கான தேர்வுக்கு தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு!
10 ஆம் வகுப்பு தனித்தேர்வர்களுக்கான தேர்வுக்கு தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மீண்டும் மறுப்பு தெரிவித்துள்ளது.
கொரோனா பரவல் காரணமாக, நாடு முழுவதும் உள்ள பள்ளி, கல்லூரிகள் அனைத்தும் கடந்த மார்ச் 24-ம் தேதி முதல் மூடப்பட்டுள்ளன. இதனால் அனைத்து தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டன. இதனிடையே, 10, 11,12-ம் வகுப்புத் தனித்தேர்வர்கள், தோல்வியடைந்த மாணவர்களுக்கு மீண்டும் துணைத் தேர்வுகள் செப்டம்பர் மாதம் நடைபெறும் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் ஏற்கனவே அறிவித்திருந்தது.
அதன்படி, தமிழகத்தில் 10-ம் வகுப்புத் துணைத் தேர்வு செப்டம்பர் 21-ம் தேதி முதல் தொடர்ச்சியாக 26-ம் தேதி வரை நடைபெறவுள்ளது. அதற்கான வழிகாட்டு நெறிமுறைகளும் வெளியானது. இந்தநிலையில், இந்த தனித்தேர்வர்களுக்கான இந்த தேர்விற்கு தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
அந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில், அதனை விசாரித்த நீதிபதிகள், 10 ஆம் வகுப்பு தனித்தேர்வர்களுக்கான தேர்வுக்கு தடை விதிக்க மீண்டும் மறுப்பு தெரிவித்தனர். மேலும், மாற்றுத்திறனாளிகளின் வீடுகளுக்கே சென்று கொரோனா பரிசோதனை நடத்தியதில் யாருக்கும் தொற்று இல்லை என தமிழக அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.