சவுக்கு சங்கருக்கு 1 லட்ச ரூபாய் அபராதம் விதித்தது சென்னை ஐகோர்ட்!
சவுக்கு சங்கருக்கு 1 லட்சம் ரூபாய் அபராதம் விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பிரபல யூடியூபரும், அரசியல் விமர்சகருமான சவுக்கு சங்கர், அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக ட்விட்டர் பக்கத்தில் சமீப காலமாக தொடர்ந்து குற்றசாட்டுகளை முன்வைத்து வருகிறார். செந்தில் பாலாஜி போக்குவரத்துதுறை அமைச்சராக இருந்தது முதல் இப்போது வரை பல்வேறு விமர்சனங்களை முன்வைத்து குற்றசாட்டி வரும் சவுக்கு சங்கர், செந்தில் பாலாஜி மீது கடுமையாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
இதையடுத்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் சவுக்கு சங்கருக்கு எதிராக மான நஷ்ட வழக்கு தொடுத்திருந்தார் செந்தில் பாலாஜி. இந்த சமயத்தில் தான் சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் அமலாக்கத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியை கைது செய்துள்ளது. இதன்பின், கடந்த சில நாட்களாக சவுக்கு சங்கர் தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்து போஸ்ட் செய்து வருகிறார்.
இந்த நிலையில், அமைச்சர் செந்தில் பாலாஜி ஏற்கனவே தொடர்ந்த அவதூறு வழக்கில் யூடியூபர் சவுக்கு சங்கருக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இடைக்காலத் தடை உத்தரவை மீறியதாக சவுக்கு சங்கருக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதித்தது சென்னை உயர்நீதிமன்றம். இனி ட்வீட் செய்யும் போது எச்சரிக்கையாக இருக்குமாறும் நீதிமன்றம் கூறியுள்ளது.