ஏ.ஆர்.ரஹ்மானிடம் ரூ.3 கோடி நஷ்ட ஈடு கேட்டு வழக்கு: சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி..!
ஏ.ஆர்.ரஹ்மானிடம் இசை நிகழ்ச்சி தோல்வியடைந்ததற்காக ரூ.3 கோடி நஷ்ட ஈடு கேட்ட வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
துபாயில் இசைநிகழ்ச்சி ஒன்றை 2000 ஆம் வருடத்தில் சென்னையை சேர்ந்த காளியப்பன் என்ற நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானை வைத்து நடத்தினார். ஆனால், இந்த நிகழ்ச்சி நஷ்டத்தில் முடிவடைந்ததால் இதற்கு நஷ்ட ஈடாக ரூ.3 கோடி ஏ.ஆர்.ரஹ்மானிடம் கேட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் சிவில் வழக்கு ஒன்றை தொடர்ந்தார்.
இந்த வழக்கு ஏற்கனவே நீதிபதி ஆர்.சுப்பிரமணியம் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. இதில் மனுதாரரின் வழக்கறிஞர் இந்த பிரச்சனை முடிந்துவிட்டதாக கூறியிருந்தார். அதனால் பிரச்சனை முடிந்துவிட்டதா என்பது குறித்து ஏ.ஆர்.ரஹ்மான் வழக்கறிஞரை தெரிவிக்குமாறு உத்தரவிடப்பட்டிருந்தது. மீண்டும் விசாரணைக்கு வந்த இந்த வழக்கில் ஏ.ஆர்.ரஹ்மான் தரப்பு வழக்கறிஞர் தெரிவித்ததாவது, எந்த சமரசமும் ஏற்படவில்லை என்றும் அதனால் இந்த வழக்கை தள்ளுபடி செய்யுமாறு கூறியுள்ளார்.
மேலும், மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் தெரிவித்ததாவது, மனுதாரரிடமிருந்து எந்த பதிலும் வரவில்லை என்று தெரிவித்தார். இரண்டு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி ஏ.ஆர்.ரஹ்மானின் நஷ்ட ஈடு வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளார்.