#பரோல் # விவகாரம்-“சிறை விதி”யை திருத்துங்கள்! – கோர்ட் அதிரடி
கைதிகளுக்கு பரோல் கிடைக்க வகைச்செய்யும் சட்டத்தில் திருத்தம் செய்ய சென்னை உயர் நீதிமன்றம் யோசனை தெரிவித்துள்ளது.
அங்கையற்கண்ணி என்பவர் சென்னையை சேர்ந்தவர் இவர் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் கூறியுள்ளதாவது:ஒரு வழக்கில், என் கணவருக்கு, மூன்று ஆண்டு சிறை தண்டனையானது விதிக்கப்பட்டது.
சென்னை, புழல் சிறையில், 16 மாதங்களுக்கு மேலாக இருந்து வருகிறார். எங்களுக்கு, 2 மகள்கள் உள்ளனர். அவர்கள், கல்லுாரியில் படித்து வருகின்றனர்.குழந்தைகளின் படிப்பு செலவுக்கும், குடும்ப செலவுக்கும், சிரமாக உள்ளது.
பணம் ஏற்பாடு செய்ய, என் கணவர் சிறையில் இருந்து வெளியே வர வேண்டும்.அவருக்கு, ஒரு மாத விடுமுறை வழங்க, சிறை அதிகாரிக்கு உத்தரவிட வேண்டும் என்று அந்த மனுவில் கோரிக்கை வைத்தார்.
இந்த மனு மீதான விசாரணை நீதிபதிகள் கிருபாகரன், வேலுமணி அடங்கிய டிவிஷன் பெஞ்ச் முன் விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில், கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் பிரபாவதி வாதாடுகையில் சிறை விதிகளின்படி, சாதாரண விடுமுறை பெற வேண்டும் என்றால், குறைந்தபட்சம், இரண்டு ஆண்டுகள் சிறையில் இருக்க வேண்டும். அதனால் விடுமுறை வழங்க இயலாது என்று கூறினார்.
மனுவை விசாரித்த நீதிபதிகள் ஏற்கனவே, 16 மாதங்கள் சிறையில் உள்ளார். மொத்த சிறை தண்டனையே மூன்று ஆண்டுகள் தான். அதனால், மகள்களின் படிப்பு செலவுக்கு பணம் ஏற்பாடு செய்வதற்காக, மனுதாரரின் கணவருக்கு, ஒரு மாத சாதாரண விடுமுறை வழங்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்தனர்.
மேலும் சம்பந்தப்பட்ட கைதி ஆகஸ்ட், 8ம் தேதி, சிறைக்கு அவர் திரும்ப வேண்டும். ஒவ்வொரு திங்கள் கிழமையும், கே.கே.நகர் போலீசில் ஆஜராக வேண்டும்.இவ்வாறு உத்தரவிட்ட நிலையில் சிறை விதிகளில் திருத்தம் வர வேண்டும்.
3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்ட நபர்களுக்கும், அதிக ஆண்டுகள் மற்றும் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட நபர்களுக்கும், ஒரே மாதிரியான விதியை திணிக்க முடியாது. சாதாரண விடுமுறை பெற, இரண்டு ஆண்டுகள் சிறைவாசம் இருக்க வேண்டும் என்றால், அது கைதிகளின் உரிமையை பாதிக்கும்.எனவே, 2 முதல், 5 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படுபவர்களுக்கு, சாதாரண விடுமுறை பெற ஏதுவாக, சிறை விதிகளில் திருத்தத்தை செய்யுங்கள் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.