புயல் கரையை கடந்துள்ள நிலையில் சென்னை மாநகர பேருந்துகள் குறைந்த அளவில் இயக்கம்!
நிவர் புயல் கரையை கடந்து உள்ளதால் சென்னையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நிறுத்திவைப்பட்டிருந்த மாநகர பேருந்துகள் குறைந்த அளவில் இயக்கப்படுகின்றன.
வங்கக்கடலில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் உருவாகிய நிவர் புயல் காரணமாக நேற்று முழுவதும் முழு தமிழகமே பதட்டத்தில் காணப்பட்டது. அதுவும் கடலோரப் பகுதிகளில் உள்ள சில மாவட்டங்களுக்கு எச்சரிக்கை கொடுக்கப்பட்டு மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு நகர்த்தப்பட்டு இருந்த நிலையில், புயலானது நேற்று இரவு 11:30 மணி முதல் அதிகாலை 2.30 மணி வரை புதுச்சேரி அருகே கரையை கடந்தது. அதி தீவிரமாக நகர்ந்து வந்த புயல் வலுவிழந்து கரையை கடந்தது என அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் சென்னையின் பல்வேறு இடங்களிலும் இதனால் பாதிப்புகள் ஏற்பட்டு இருந்த நிலையில் தற்போது சென்னை புறநகர் பகுதியில் காற்றின் வேகமும் மழையும் தொடர்ந்து கொண்டுதான் உள்ளது. நகரின் உட்பகுதியில் லேசாக அவ்வப்போது மழை பெய்து வந்தாலும் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட நிலையில் இருப்பதால் தற்பொழுது நிவர் புயலுக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நிறுத்தப்பட்டிருந்த பேருந்து சேவைகள் துவங்கப்பட்டுள்ளது. சென்னை மாநகரப் பேருந்துகள் மட்டும் குறைந்த அளவில் இயக்கப்பட்டுக்கொண்டுள்ளது.