சென்னை பட்ஜெட் 2022 : எனக்கு இந்தி தெரியாது – பாஜக கவுன்சிலர் உமா ஆனந்தன்
2022-2023-ஆம் ஆண்டிற்கான பட்ஜெட் கூட விவாதத்தின் போது பாஜக கவுன்சிலர் உமா ஆனந்தன் எனக்கு இந்தி தெரியாது என கூறியதால் சிரிப்பலை.
பெருநகர சென்னை மாநகராட்சியின் வரவு-செலவு கணக்கான ‘பட்ஜெட்’ இன்று தாக்கல் செய்யப்பட்டது. இந்த ‘பட்ஜெட்டுக்கான’ கூட்டம் சென்னை மாநகராட்சியின் தலைமை அலுவலகமான ரிப்பன் மாளிகையில் உள்ள மாமன்ற கூட்டரங்கில் இன்று காலை 10 மணிக்கு தொடங்கிய நிலையில், இக்கூட்டத்திற்கு, சென்னை மாநகராட்சி மேயர் ஆர்.பிரியா தலைமை தாங்கி நடத்துகிறார்.
2022-23 பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உள்ள வரவு-செலவு கணக்குகள் தாக்கல் செய்யப்பட்டத்தை தொடர்ந்து, அந்த பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்றது. அப்போது பேசிய பாஜக கவுன்சிலர் உமா ஆனந்தன், நமஸ்கராம் என்று தனது உரையை துவங்கினார். மற்ற உறுப்பினர்கள் ஒருமித்த குரலில் ‘வணக்கம்’ என தெரிவித்தனர்.
பாஜக உறுப்பினர் உமா ஆனந்தன் ஆங்கிலம், தமிழ் கலந்து பேசுவேன் மன்னித்து கொள்ளவும் என்று கூறினார். அதற்கு மன்ற உறுப்பினர்கள் இந்தியில் பேசாமல் இருந்தால் சரி என கூறினார்கள். அதற்கு உமா ஆனந்தன் எனக்கு இந்தி தெரியாது என பதிலளித்தார். இதனால் அங்கு சிரிப்பலை எழுந்தது.