சென்னையில் சாலைத் தடுப்புகளை இழுத்துச் சென்ற இளைஞர்கள் 3 பேர் கைது!
சென்னை மெரினா காமராஜர் சாலை மற்றும் கோட்டூர்புரம் காந்தி மண்டபம் சாலையில் தடுப்புகளை இழுத்துக் கொண்டே பைக் ரேஸில் இளைஞர்கள் ஈடுபட்டனர். இந்த வீடியோ காட்சிகள் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அவர்களை தனிப்படை அமைத்து போலீசார் தேடி வந்தனர்.
பைக் ரேஸில் ஈடுபட்ட ஒரு இளைஞர், தனது செயல் பற்றி ஃபேஸ்புக்கில் வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டார். இதையடுத்து சைபர் கிரைம் போலீசார் உதவியோடு, முகநூலில் பதிவிட்ட பீட்டர் என்ற இளைஞரை போலீசார் கைது செய்தனர்.
அவர் அளித்த தகவலின் பேரில் மேலும் 2 இளைஞர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இதனிடையே, தனது செயலுக்கு வருத்தம் தெரிவித்து பைக் ரேஸில் ஈடுபட்ட இளைஞர் பீட்டர் மன்னிப்புக் கோரியிருக்கிறார்.
இதுதொடர்பாக, அவர் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில், புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது பிறரின் கவனத்தை ஈர்க்க, சாலைத் தடுப்பை பைக்கில் இழுத்துச் சென்ற சம்பவம், பொதுமக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை அறிந்து கொண்டதாகவும், இனிமேல் இதுபோன்ற செயலில் ஈடுபட மாட்டேன் என்றும் அந்த வீடியோவில் பீட்டர் தெரிவித்துள்ளார்.
source: dinasuvadu.com