சென்னையில் கால்பந்து போட்டி.., போக்குவரத்து மாற்றம்.! ரூட்டை பார்த்து தெரிஞ்சிக்கோங்க…
ஃபிஃபா உலக கோப்பை வென்ற பிரேசில் முன்னாள் வீரர்களான ரொனால்டினோ, கில்பெர்டோ சில்வா, ரிவால்டோ உள்ளிட்ட பல பிரபலமான வீரர்கள் விளையாட உள்ளனர்.

சென்னை : சென்னை ஜவஹர்லால் நேரு மைதானத்தில் நாளை பிரேசில் லெஜண்ட்ஸ் (Brazil Legends) மற்றும் இந்தியா ஆல்-ஸ்டார்ஸ் (India All-Stars) அணிகளுக்கு இடையே ஒரு மாபெரும் கால்பந்து போட்டி நடைபெறவுள்ளது. இதை ஃபுட்பால் பிளஸ் அகாடமி (Football Plus Academy) ஏற்பாடு செய்துள்ளது.
இது ஒரு வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வாகும், ஏனெனில் இந்திய மண்ணில் முதல் முறையாக 2002 ஆம் ஆண்டு உலகக் கோப்பையை வென்ற பிரேசிலிய அணியின் முன்னாள் வீரர்கள், இந்தியாவின் முன்னணி கால்பந்து நட்சத்திரங்களை எதிர்கொள்ள உள்ளனர்.
இந்த போட்டி சென்னையின் பிரபலமான ஜவஹர்லால் நேரு மைதானத்தில் (மெரினா அரங்கம் என்றும் அழைக்கப்படுகிறது) மாலை 7:00 மணிக்கு தொடங்க உள்ளது. இப்போட்டியினை காண 20,000 பார்வையாளர்கள் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுவதால், போட்டி நடைபெறும் நாளன்று மதியம் 3.00 மணி முதல் இரவு 11.00 மணி வரை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
- வாகன நிறுத்தத்திற்கான இடம் குறைவாக இருப்பதால் பார்வையாளர்கள் பொது போக்குவரத்துகளான சென்னை சென்ட்ரல் மெட்ரோ நிலையம், புறநகர் இரயில்கள் மற்றும் மாநகர போக்குவரத்துகளை பயன்படுத்தி அங்கிருந்து 200 மீட்டர் தொலைவில் உள்ள விளையாட்டு மைதானத்தை நடந்து அடையலாம், வி.பி பார்க் சாலை (விக்டோரியா ஹால் சாலை) வழியாக சென்று மைதானத்தின் பின்புற நுழைவு வழியாக மைதானத்தை அடையலாம். பார்வையாளர்கள் இராஜாமுத்தையா சாலையைப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும்.
- சென்ட்ரல் இரயில் நிலைய மார்க்கமாக கார்/பைக்குகளில் வரும் பார்வையாளர்கள் பார்க் சாலையில் (விக்டோரியா ஹால் சாலை) வலதுபுறம் திரும்பி, மைதானத்தின் பின்புற வழியாக வாகன நிறுத்துமிடமான “பி” மைதானம் மற்றும் “சி” மைதானத்தில் வாகனங்களை நிறுத்தி அங்கிருந்து விளையாட்டு மைதானத்தை அடையலாம்.
- இராஜா முத்தையா சாலையில் மாநகர பேருந்துகள் இயக்க தடைவிதிக்கப்படும். அதற்கு பதிலாக, அவ்வாகனங்கள் ஈ.வி.ஆர் சாலை, ஈ.வி.கே சம்பத் சாலை, டவுட்டன், நாரயாணகுரு சாலை, சூளை நெடுஞ்சாலை மற்றும் டெமெல்லஸ் சாலை வழியாக சென்று தங்கள் இலக்கை அடையலாம்.
- எழும்பூர் இரயில் நிலைய மார்க்கமாக வாகனங்களில் வரும் பார்வையாளர்கள் நேராக சென்ட்ரல் இரயில் நிலையத்தை நோக்கிச் சென்று, பார்க் சாலை (விக்டோரியா ஹால் சாலை) இடதுபுறம் திரும்பி, மைதானத்தின் பின்புற வழியாக வாகன நிறுத்துமிடமான “பி” மைதானம் மற்றும் “சி” மைதானத்தில் வாகனங்களை நிறுத்தி அங்கிருந்து விளையாட்டு மைதானத்தை அடையலாம்.
- அதிக போக்குவரத்து நெரிசல் ஏற்படும் போது சூளை ரவுண்டானாவிலிருந்து நேரு விளையாட்டு மைதானம் நோக்கி வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்படும். அதற்கு பதிலாக, அவர்கள் தங்கள் இலக்கை அடைய சூளை நெடுஞ்சாலை, ஈ.வி.கே சம்பத் சாலை, ஈ.வி.ஆர் சாலை வழியாக திருப்பி விடப்படுவார்கள்.
- மேலும், அதிக போக்குவரத்து நெரிசலின் போது ஜெர்மியா சாலை, வேப்பேரி நெடுஞ்சாலை (வேப்பேரி காவல் நிலையம்) சந்திப்பிலிருந்து நேரு ஸ்டேடியம் நோக்கி செல்ல வாகனங்களுக்கு அனுமதி இல்லை.
- சொந்த வாகனங்கள் மற்றும் வாடகை வாகனங்களில் போட்டியை பார்வையிட வரும் பார்வையாளர்கள் கீழே குறிப்பிட்டுள்ள இடங்களில் தங்கள் வாகனங்களை நிறுத்துமாறு அறிவுறுத்தப்படுகிறது.
மெட்ரோ ரயிலில் கட்டணமில்லா பயணம்:
இந்த போட்டியை காண மெட்ரோவில் இலவசமாக பயணிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. போட்டிக்கான நுழைவுச் சீட்டுகளில் உள்ள QR-ஐ ஸ்கேன் செய்து மெட்ரோ ரயிலில் கட்டணமின்றி செல்லலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.