சார்பட்டா முழுக்க முழுக்க திமுகவின் பிரச்சார படமாகவே இருக்கிறது – முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்
சார்பட்டா முழுக்க முழுக்க திமுகவின் பிரச்சார படமாகவே இருக்கிறது என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
நடிகர் ஆர்யா நடிப்பில் இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் சார்பேட்டா பரம்பரை. வடசென்னையில் நடக்கும் குத்துச்சண்டையை மையமாக வைத்து இந்த படம் உருவாகியுள்ளது. இந்த திரைபடத்தில் ஆர்யாவிற்கு ஜோடியாக நடிகை, துஷ்ரா விஜயன் நடித்துள்ளார். மேலும், கலையரசன், பசுபதி, அனுபமாகுமார், சஞ்சனா நடராஜன், மேலும் பல பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
இந்நிலையில், அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் இப்படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கருத்து தெரிவித்துள்ளார். இப்படம் குறித்து அவர் கூறுகையில், சார்பட்டா படத்தில் எம்ஜிஆரை தவறாக சித்தரித்துள்ளது மிகுந்த வருத்தமளிக்கிறது; கண்டிக்கத்தக்கது. சார்பட்டா முழுக்க முழுக்க திமுகவின் பிரச்சார படமாகவே இருக்கிறது என குற்றசாட்டியுள்ளார்.
மேலும், எம்ஜிஆருக்கும், விளையாட்டுத்துறைக்கும் எந்த தொடர்பும் இல்லை என்பது போல காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளன. கலை மூலம் உண்மைகளை மறைப்பது வருங்கால தலைமுறைக்கு செய்யும் துரோகம் என்றும், விளையாட்டை விடாப்பிடியாய் கைக்கொண்ட எம்ஜிஆர் எத்தனையோ வீரர்களை ஊக்குவித்தவர் என்றும் தெரிவித்துள்ளார்.