அதிகாரத்தை கை மாற்றுவதுதான் வாரிசு அரசியல்! பாஜகவில் வாரிசு அரசியல் இல்லை – வானதி சீனிவாசன்
பாஜகவில் வாரிசு அரசியல் இல்லை, தந்தை – மகன் – பேரன் – கொள்ளுப்பேரன் என அதிகாரத்தை கை மாற்றுவதுதான் வாரிசு அரசியல் என எம்எல்ஏ வானதி சீனிவாசன் விமர்சித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ளார் அறிக்கையில், மிசோரமில் ஊடகங்களுக்கு பேட்டி அளித்த காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, காங்கிரஸ் கட்சியில் வாரிசு அரசியல் இருப்பதாக பாஜக குற்றம்சாட்டுகிறது.
ஆனால், அமித்ஷா மகன், ராஜ்நாத் சிங்கின் மகன் என்ன செய்கிறார்? அனுராக் தாக்கூர் எப்படி முக்கியத்துவம் பெற்றார்? இவையெல்லாம் வாரிசு அரசியல் இல்லையா? என கேள்வி எழுப்பியுள்ளார். நாட்டின் வளர்ச்சிக்கு தடையாக இருக்கும் வாரிசு அரசியலை பாஜக அம்பலப்படுத்தும் போதெல்லாம், பாஜக தலைவர்களது குடும்பத்தில் ஒரு சிலர் அரசியலில் இருப்பதை எதிர்வாதமாக முன் வைப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளன. ராகுலும் அதைத்தான் செய்திருக்கிறார்.
பாஜக மீதும் வாரிசு அரசியல் பழியை சுமத்த முயற்சித்திருக்கிறார். காங்கிரஸ், திமுக, சமாஜ்வாதி, ராஷ்ட்ரிய ஜனதாதளம், திரிணமூல் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், சிவசேனா (உத்தவ் தாக்கரே பிரிவு), தேசிய மாநாட்டுக் கட்சி, மக்கள் ஜனநாயகக் கட்சி, ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா என ‘இந்தியா’ கூட்டணியில் உள்ள பெரும்பாலான கட்சிகளில் முடிவெடுக்கும் அதிகாரம் கொண்ட தலைமை பதவிக்கு ஒரு குடும்பத்தில் பிறந்தவர்கள் மட்டுமே வர முடிகிறது.
ஜவஹர்லால் நேரு – இந்திரா – ராஜிவ் – சோனியா – ராகுல் – பிரியங்கா, கருணாநிதி – மு.க.ஸ்டாலின் – உதயநிதி ஸ்டாலின், முலாயம் சிங் – அகிலேஷ் யாதவ், லாலு பிரசாத் யாதவ் – தேஜஸ்வி யாதவ், சரத்பவார் – சுப்ரியா சுலே, ஷேக் அப்துல்லா – பரூக் அப்துல்லா – உமர் அப்துல்லா, முப்தி முகமது சயீத் – மெகபூபா முப்தி, பால் தாக்கரே – உத்தவ் தாக்கரே – ஆதித்ய தாக்கரே இப்படி அப்பா – மகன் – மகள் – பேரன் – பேத்தி – கொள்ளுப் பேரன் – பேத்தி என மன்னராட்சி போல, அதிகாரம் கை மாறுவதையும், இப்படிப்பட்ட கட்சிகளில் மற்றவர்கள் வாரிசு தலைமைக்கு அடிமை போல இருப்பதையும் தான் பாஜக எதிர்க்கிறது. விமர்சிக்கிறது.
ஒருவர் அரசியலில் இருக்கிறார் என்பதற்காக அவரது மகனோ, மகளோ அரசியலுக்கு வரக்கூடாது என்று யாரும் சொல்ல முடியாது. ஒருவர் எந்தத் துறையை தேர்ந்தெடுப்பது என்பது அவரவர் விருப்பம், உரிமை. இதை வாரிசு அரசியலாகக் கருத முடியாது. இதுதான் பாஜகவில் நடக்கிறது. ஆனால், தந்தையின் இடத்தில் மகன், மகளை அமர்த்துவது, தந்தையின் அதிகாரத்தை மகன், மகளுக்கு அப்படியே மாற்றுவது அதாவது காவல்துறை தலைமை இயக்குநர் (டிஜிபி), தலைமைச் செயலாளர் பதவிகளுக்கு எடுத்த எடுப்பிலேயே ஒருவரை நியமிப்பது போல, கட்சித் தலைவர், முதலமைச்சர், பிரதமர் பதவிகளுக்கு வாரிசுகளை அமர்த்துவதுதான் வாரிசு அரசியல்.
இது ஜனநாயகம், சமத்துவம், சமூக நீதிக்கு எதிரானது. சர்வாதிகார ஆட்சிக்கு வழிவகுக்கக் கூடியது. இதுதான் காங்கிரஸ், திமுக உள்ளிட்ட ‘இண்டி’ கூட்டணி கட்சிகளில் நடக்கிறது. இதை எதிர்க்க வேண்டாமா?. பாஜகவில் ராஜ்நாத் சிங் மகன் போன்ற சில வாரிசுகள் அரசியலில் இருந்தாலும் அவர்கள் தந்தையின் இடத்தில் கொண்டுவந்து உட்கார வைக்கப்படவில்லை. அவர்களுக்கு தலைமை பதவி, முடிவெடுக்கும் அதிகாரம் எதுவும் இல்லை. மற்றவர்களைப் போல தான் அவர்களும் கட்சியில் இருக்கிறார்கள்.
மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு பிறகு திமுக தலைவராக, முதலமைச்சராக துரைமுருகன் போன்றவர்கள் வந்து, அந்த அமைச்சரவையில் ஸ்டாலின் ஓர் அமைச்சராக இருந்தால் அது வாரிசு அரசியல் அல்ல. ஆனால், இப்போது அப்படியா நடக்கிறது. உதயநிதியின் பேரனையும் ஏற்போம் என மூத்த அமைச்சர்களே பேசும் நிலைதானே இருக்கிறது. இதனால், கட்சிக்காக உழைத்த, தகுதியும், திறமையும் கொண்ட மற்றவர்கள் யாரும் தலைமைக்கு வர முடிவதில்லை.
ஒரு பதவிக்கு குறிப்பாக தலைமை பதவிக்கு இந்த குடும்பத்தில் பிறந்தால் தான் வர முடியும் என்பது, மற்றவர்களுக்கு போடப்படும் தடை. ஒரு இடத்தில் நுழையாமல் இருக்க வேலி அமப்பது போன்றது. 144 தடை உத்தரவு போன்றது. இது பாசிசம் தானே. மக்களாட்சி நடக்கும் நாட்டில் இதை கேள்வி கேட்காமல் எப்படி இருக்க முடியும்?. ஜனநாயகம், சமத்துவம், சம நீதி, சமூக நீதி என பேசிக் கொண்ட அதற்கு நேர் எதிராக செயல்படுவதுதான் காங்கிரஸ், திமுக உள்ளிட்ட வாரிசு தலைமை கட்சிகளின் வழக்கமாக உள்ளது. இதைதான் பாஜக மக்களிடம் அம்பலப்படுத்துகிறது என தெரிவித்துள்ளார்.