தமிழக அமைச்சரவையில் மாற்றம்! துணை முதல்வரானார் உதயநிதி ஸ்டாலின்!

புழல் சிறையில் இருந்து செந்தில் பாலாஜி வெளியே வந்த நிலையில், அவருக்கு மீண்டும் அமைச்சர் பதவி வழங்கப்படுவது உறுதியானது.

Tamilnadu Cabinet Change

சென்னை : கடந்த சில வாரங்களாகவே தமிழகத்தில், அமைச்சரவை மாற்றம் தொடர்பான விஷயங்கள் தான் பெரிதும் பேசும் பொருளாகவே இருந்து வந்தது. அந்த வகையில், தமிழக அமைச்சரவையில் தற்போது மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது.

அதன்படி, தமிழக துணை முதல்வராக உதயநிதி ஸ்டாலின் நாளை நியமிக்கப்படவுள்ளார். மேலும், மீண்டும் அமைச்சராக செந்தில் பாலாஜியும் பதவியேற்கவுள்ளனர். நாளை ஞாயிற்றுக்கிழமை (செப்.29) பிற்பகல் 3.30 மணி அளவில் ஆளுநர் மாளிகையில் வைத்து பதவியேற்பு நிகழ்வு நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக ஆளுநர் மாளிகை சனிக்கிழமை இரவு வெளியிட்ட செய்திக் குறிப்பில், “தமிழக அமைச்சரவையில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. முதல்வர் ஸ்டாலினின் பரிந்துரைகளை ஆளுநர் ஆர்.என்.ரவி ஏற்றார். மேலும், 6 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றப்பட்டுள்ளன. அதன்படி ..

  1. உயர் கல்வித் துறை அமைச்சராக இருந்து வந்த பொன்முடிக்கு வனத்துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
  2. சுற்றுச்சூழல் அமைச்சராக இருந்த வி.மெய்யநாதனுக்கு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
  3. ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சராக இருந்த கயல்விழி செல்வராஜுக்கு மனித வள மேம்பாட்டுத்துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
  4. வனத்துறை அமைச்சராக இருந்த மதிவேந்தனுக்கு ஆதி திராவிடர் நலத்துறைக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
  5. அமைச்சர் ராஜகண்ணப்பனுக்கு பால் வளத்துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
  6. நிதி அமைச்சர் தங்கம் தென்னரசுக்கு கூடுதலாக சுற்றுச்சூழல் மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் காலநிலை மாற்றம் துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

என மொத்தம் 6 பேரின் இலாக்காக்கள் மாற்றியமைக்கப்பட்டுள்ளன. தமிழக அமைச்சரவையில் இருந்த மனோ தங்கராஜ், செஞ்சி மஸ்தான் மற்றும் ராமச்சந்திரன் ஆகியோர் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

மேலும், அவர்களுக்கு பதிலாக புதிய அமைச்சர்களாக செந்தில் பாலாஜி, ஆவடி நாசர், கோ.வி.செழியன் மற்றும் பனமரத்துப்பட்டி ராஜேந்திரன் ஆகியவர்களின் பெயர்களை முதல்வர் ஸ்டாலின் பரிந்துரைத்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்