நீலகிரி, கோவை, கன்னியாகுமரி உள்ளிட்ட பல மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு…!
நீலகிரி, கோவை, கன்னியாகுமரி உள்ளிட்ட பல மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென்மேற்கு பருவ மழையை முன்னிட்டு தமிழகத்தில் பரவலாக பல மாவட்டங்களில் அவ்வப்போது மழை பெய்து வருகிறது. இந்நிலையில் இன்று சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, தென்காசி, கன்னியாகுமரி மற்றும் கடலோர பகுதிகளில் உள்ள சில மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது என கூறியுள்ளார்.
மேலும் நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, தென்காசி ஆகிய கடலோர மாவட்டங்களில் இன்றும், நாளையும் லேசான மழை பெய்யக்கூடும் எனவும், புதுச்சேரி, காரைக்காலில் ஓரிரு இடங்களில் மட்டும் லேசான மழை பெய்யும் எனவும் தெரிவித்துள்ளார். இது மட்டுமல்லாமல் வருகிற 7 மற்றும் 8 ஆகிய தேதிகளில் நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும், 9ஆம் தேதி நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, தென்காசி மற்றும் கடலோர மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும், ஒன்பதாம் தேதி வரை அரபிக்கடலில் தென் மேற்கு, மத்திய மேற்கு, வடக்கு பகுதிகளில் பலத்த காற்று வீச வாய்ப்புள்ளதாகவும், மணிக்கு 50 முதல் 70 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் அடுத்த நான்கு நாட்களுக்கு அப்பகுதிக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் எனவும் எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது.